நாட்டில் குறைந்த விலையில் தரமற்ற ரின் மீன்கள் இறக்குமதி செய்யப்படுவதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பபட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
ரின் மீன் உற்பத்தியின் மூலம் தேசிய மட்டத்தில் நுகர்வுத் தேவையினை முழுமையாக பூர்த்தி செய்து கொள்வதற்கும் ரின் மீன் ஏற்றுமதி துறையின்னை மேலும் பலப்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிப்பது தொடர்பில் எமது அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது.
அதனடிப்படையில் எமது அமைச்சு பல்வேறு நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றது, அண்மையில் நாம் இத்துறை தொடர்பில் அக்கறை கொண்டுள்ள ஆளும் தரப்பு, எதிர் தரப்பு, நாடாளுமன்ற உறுப்பினரகள், ரின் மீன் உற்பத்தியார்கள் மற்றும் உரிய அதிகாரிகள் உள்ளடங்கியதாக ஒரு கலந்துரையாடலினையும் நாம் ஏற்பாடு செய்திருந்தோம்.
அதன்போது சில தீர்மானங்களை எடுத்துள்ளோம். மூலப்பொருட்களின் விலைகள், எரிபொருள் உள்ளிட்ட ஏனைய உள்ளீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளமை காரணமாக தற்போதைய நிலையில் ரின் மீன்களின் உற்பத்தி செலவுச் சதவீதமும் அதிகரித்துள்ளது.
ரின் மீன்களின் விலையினை விட இறக்குமதி செய்யப்படுகின்ற ரின் மீன்களின் விலைகள் குறைவாக காணப்படுகின்றன. குறைந்த விலைக்கு தரமற்ற ரின் மீன்களை இறக்குமதி செய்வதே இதற்கு காரணமாகும்.
எனவே தேசிய ரின் மீன் உற்பத்தி துறைக்கு பாதிப்பினை நிவர்த்திக்கின்ற வகையிலும், விலைகளில் போட்டித் தன்மையினை ஏற்படுத்தும் வகையிலும் ஒரு கிலோ கிராம் ரின் மீனுக்கான விசேட வர்த்தக வரியினை 100 ரூபாயிலிருந்து 200 ரூபா வரையில் அதிகரிப்பதற்கு நாம் கடந்த 01.12.2022 திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம். – என்றார்.