Saturday, January 25, 2025
HomeLatest Newsஇந்த அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் எக்காலத்திலும் தீர்வைப் பெற முடியாது! - பிரதமர்

இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் எக்காலத்திலும் தீர்வைப் பெற முடியாது! – பிரதமர்

“அரசியல், பொருளாதாரம் என நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெற்றுத்தரக்கூடிய – தீர்வை வழங்கக்கூடிய ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திகழ்கின்றார்” – என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

எனவே, ரணிலின் ஆட்சிக்காலத்தில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெற இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் எந்தக் காலத்திலும் நாம் தீர்வைப் பெற முடியாது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ரணில் இல்லாமல் சஜித், அநுர ஜனாதிபதியாகி இருந்திருந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் பணம் இலங்கைக்கு நிச்சயமாகக் கிடைத்திருக்காது என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தாம் ஆட்சிக்கு வந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சித் திட்டத்தில் இருந்து விலகுவார்கள் என்று சஜித் தெளிவாகக் கூறி இருந்தார்.

அதேவேளை, சர்வதேச நாணய நித்தியத்திடம் சென்ற எந்த நாடும் முன்னேறியது இல்லை என்ற கருத்தை ஜே.வி.பி. கூறி இருந்தது.

ஆனால், ரணில் ஜனாதிபதியானது முதல் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியைப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். அவரால்தான் இது சாத்தியமானது.

மறுபுறம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. எமது நாட்டு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணம் அனுப்புவதும் அதிகரித்துள்ளது.” – என்றார்.

Recent News