Saturday, January 18, 2025
HomeLatest Newsநிறைவேற்று ஜனாதிபதி முறை ரத்துச்செய்யப்பட்டால், மாகாணசபை முறையும் ரத்துச்செய்யப்படவேண்டும்! – தேசிய கூட்டுக் குழு

நிறைவேற்று ஜனாதிபதி முறை ரத்துச்செய்யப்பட்டால், மாகாணசபை முறையும் ரத்துச்செய்யப்படவேண்டும்! – தேசிய கூட்டுக் குழு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் 11 அரசியல் கட்சிகளின் குழுவினால் முன்வைக்கப்பட்ட உத்தேச அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் தேசிய கூட்டுக் குழு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

குழுவின் இணைத்தலைவர்களான லெப்டினன்ட் கேணல் அனில் அமரசேகர, மற்றும் கே.எம்.பி. கொட்டகதெனிய ஆகியோர் இது தொடர்பில், கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

தற்போதைய தேர்தல் முறையை மாற்றாமலும் அல்லது 13வது திருத்தத்தை நீக்காமலும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை ஐக்கிய மக்கள் சக்தி முன்மொழிந்துள்ளது

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான சட்டத்தரணிகள் சம்மேனத்தினத்தின் முன்மொழிவும் இதனை ஒத்திருக்கிறது.

இந்தநிலையில், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது என்ற விடயத்தில் அனைத்து நிறைவேற்று அதிகாரங்களையும் நாடாளுமன்றத்தில் குவிப்பது என்பது பொருத்தமற்றது என்று தேசிய கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.

மாகாண சபை முறையில், பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உட்பட அரசாங்கத்தின் 73 வெவ்வேறு விடயங்கள் தொடர்பில் அதிகாரங்கள் உள்ளன.

மாகாண நிர்வாகிகள் எவரேனும் தேசிய நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படும்போது, தொங்கு நாடாளுமன்றம் நடைமுறையில் இருந்தால், அதனால் எதனையும் செய்ய முடியாது.

எனவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டும் என்று தேசிய கூட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனைவிட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படவேண்டுமானால், 13வது அரசியல் அமைப்பு திருத்தம் ரத்துச்செய்யப்படவேண்டு்ம் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

மாகாண சபை முறையில் இருந்து, பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும், மாகாணசபை சட்டங்கள், நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு அரச காணிகளை விற்பனை செய்வது தடை செய்யப்பட வேண்டும் என்றும் தேசிய கூட்டுக் குழு வலியுறுத்தியுள்ளது.

Recent News