வெடுக்குநாறி மலையில் இன்றைய தினம் காலை விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய இன்று முற்பகல் 11 மணியளவில் புதிய விக்கிரகங்கள் மீள பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதால் பக்தர்களை அதில் பங்கேற்குமாறும் ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
வவுனியா வெடுக்குநாறி மலையில் மீண்டும் வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், நேற்று முன்தினம் அங்கு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் வவுனியா வெடுக்குநாறி மலை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் தேவராசா சுபாஜினி முன்னிலையில் விசாரணைக்கு சென்றது.
இதன்போது விக்கிரகங்கள் இன்றி அங்கு நேற்று வழிபாடுகள் நடத்தப்பட்டமை தொடர்பிலும், வெடுக்குநாறி மலையிலிருந்த விக்கிரகங்கள் மற்றும் பூஜை பொருட்கள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அதிபர் சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனை ஆராய்ந்த வவுனியா நீதவான், வெடுக்குநாறி மலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட விக்கிரகங்களை அதே இடத்தில் மீண்டும் பிரதிஷ்டைசெய்யுமாறும், பூஜை பொருட்களை சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இந்த நிலையிலேயே சிவபூமி அறக்கட்டளை நிலையத்தினால் வழங்கப்பட்ட புதிய விக்கிரகங்கள் இன்று மீள பிரதிஷ்டை செய்யப்படவுள்ளதாக வெடுக்குநாரி மலை ஆலய நிர்வாக உறுப்பினரொருவர் தெரிவித்தார்.