உலகெங்கும் 20 ஆயிரம் லட்சம் கோடி எறும்புகள் உள்ளதாகவும், அவற்றின் மொத்த எடை 1,200 கோடி கிலோ என்றும் ஆராய்ச்சியாளர்களின் புதிய கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்த உலகத்தில் இயற்கையாக நடக்கும் நிகழ்வுகள் ஒரு சங்கிலித் தொடர் போன்றவை. இதில், ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு முக்கிய பங்கு உள்ளது.
சிறிய எறும்பாக இருந்தாலும், மிகப் பெரிய யானை, திமிங்கலமாக இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் சில முக்கியத்துவம் உள்ளது.
நம் மண்ணை வளமுள்ளதாக்குவதில் இருந்து, பறவைகளுக்கு தேவையான உணவுகள் கிடைப்பதை உறுதி செய்வது வரை, எறும்புகளின் பங்களிப்பு மிக முக்கியமாகும்.
இந்த உலகில் எவ்வளவு எறும்புகள் உள்ளன என்பது தொடர்பாக இதற்கு முன் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த வகையில், மேற்கு அவுஸ்திரேலிய பல்கலை பேராசிரியர் மார்க் வாங்க், ஹோ ங்கோங் பல்கலையின் பேராசிரியர் பெனாய்ட் கியோனார்ட் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் புதிய ஆய்வில் ஈடுபட்டனர்.
இவர்கள் பல்வேறு தரவுகளை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். இவர்களுடைய ஆய்வறிக்கை, அவு ஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் ‘த கன்சர்வேஷன்’ எனப்படும் சுற்றுச்சூழலியல் இதழில் வெளியாகி உள்ளது.
ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகெங்கும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட, பெயர் வைக்கப்பட்ட 15 ஆயிரத்து 700 வகை எறும்புகள் உள்ளன. இவை தவிர, பெயரிடப்படாத பல எறும்பு வகைககளும் உள்ளன.
எறும்புகளின் எண்ணிக்கை தொடர்பாக, பல்வேறு மொழிகளில் ஏற்கனவே வெளியான, 489 ஆய்வுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டது.
இதன்படி, உலகெங்கும் 20 ஆயிரம் லட்சம் கோடி எறும்புகள் உள்ளன. இவை, தோராய எண்ணிக்கையாக இருந்தாலும், கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது.
உயிரினங்களின் எடை, அவற்றின் உடலில் உள்ள கார்பன் வாயுவின் அடிப்படையில் கணக்கிடப்படும். இதன்படி கணக்கிட்டால், எறும்புகளின் மொத்த எடை, 1,200 கோடி கிலோவாகும்.
இது உலகெங்கும் உள்ள வனங்களில் வசிக்கும் பறவைகள், பாலுாட்டிகளின் எடையைவிட அதிகமாகும்.
மேலும், மனிதர்களின் மொத்த எடையில் 20 சதவீதம் அளவுக்கு எறும்புகளின் மொத்த எடை உள்ளது.
நகரமயமாக்கல், ரசாயனங்களின் பயன்பாடு, பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால், பல பூச்சியினங்கள் அழிந்து வருகின்றன.
மனிதன் தன்னுடைய சொந்த நலனை பாதுகாக்க நினைத்தால், எறும்பு உள்ளிட்ட பூச்சியினங்கள் உள்ளிட்டவற்றை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.