Wednesday, December 25, 2024
HomeLatest Newsபிபோர்ஜோய் புயலின் கோர தாண்டவம்...!பாகிஸ்தானில் வெளியேற்றப்படும் நாட்டு மக்கள்...!

பிபோர்ஜோய் புயலின் கோர தாண்டவம்…!பாகிஸ்தானில் வெளியேற்றப்படும் நாட்டு மக்கள்…!

பாகிஸ்தானில் மக்கள் பாதுகாப்பான இடங்களிற்கு வெளியேற்றப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வடகிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள பிபோர்ஜோய் அதிதீவிர புயல் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இன்று காலை நிலை கொண்டிருந்தது.

அதனால், இது நாளை (15) மாலை குஜராத்தின் ஜாக்ஹா துறைமுகப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதுடன் அந்த புயல் கரையை கடக்கும் வேளையில் பலத்த மழையுடன் பலத்த காற்றும் வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதன் எதிரொலியால், பாகிஸ்தானிலுள்ள கடற்கரை நகரங்கள் மற்றும் சிறிய தீவுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களிற்கு தமது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக அந்த நாட்டின் மூன்று மாவட்டங்களின் ஏழு தாலுகாக்களில் வசிக்கும் 71,380 பேரில் இதுவரை 56,985 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 22 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தாமாகவே வெளியேறியுள்ளனர்.

இதனால் மக்கள் தங்குவதற்காக அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உட்பட பல்வேறு இடங்களில் 37 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், ஷா பண்டாரின் பல்வேறு கிராமங்களில் இருந்து 700 பேரை இராணுவத்தினர் வெளியேற்றியதாகவும், 64 மீனவர்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், பலுசிஸ்தானின் கடலோரப் பகுதிகளிலும், ஹைதராபாத், ஷாஹீத் பெனாசிராபாத், சுக்கூர் மற்றும் சங்கர் உள்ளிட்ட சிந்துவின் கிராமப்புறங்களிலும் கடற்படை மற்றும் மருத்துவக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

Recent News