Tuesday, December 24, 2024

கொட்டு மேளம் இன்றி குழந்தை பெற்று தாருங்கள்- சீனாவின் புதிய திட்டம்..!

சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தற்பொழுது சரிந்து கொண்டு செல்வதால், அங்கு திருமணமாகாத பெண்களுக்கும், மணமுறிந்த பெண்களுக்கும் செயற்கை முறையில் கருத்தரிப்பதற்கு அனுமதி வழங்கும் நடவடிக்கை தொடர்பாக சீனா ஆலோசித்து வருகின்றது.

உலகிலேயே அதிக மக்கள் தொகையை உடைய நாடாகவிருந்த சீனா, அதனைக் கட்டுப்படுத்துவதற்காக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தமையால் தற்பொழுது பிறப்பு விகிதம் குறைந்துள்ளதுடன் முதியோர்களின் விகிதாசாரமும் அதிகரித்துள்ளது.

தம்பதியா் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்வதற்குக் கட்டுப்பாடு விதிக்கும் அதன் ஒற்றைக் குழந்தை கொள்கையால்,மக்கள் தொகையில் அண்மையில் சீனாவை இந்தியா பின்தள்ளியுள்ளது.

இந்த நிலையில், ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற பல ஆண்டுகால கட்டுப்பாட்டை நீக்கியதுடன், அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கு தம்பதியரை ஊக்குவிக்கும் முகமாக பல சலுகைகளை வழங்கி வருகின்றது.

அத்தோடு, கணவர் இன்றி தனியாக வசிக்கும் பெண்கள் செயற்கை முறையில் கருத்தரிப்பதற்கு அந்த நாட்டின் சிசுவான் மாகாண அரசு மட்டும் கடந்த பெப்ரவரி மாதம் அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து, திருமணமாகாதவர்கள், விவாகரத்து பெற்றவா்கள் மற்றும் கணவனை இழந்தவா்களால் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதுடன் அனுமதியை தேசிய அளவில் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இருப்பினும், இது தொடா்பாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதுடன் அதற்கான ஆலோசனையிலே ஈடுபட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Videos