சீனாவில் மக்கள் தொகை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு உதவும் மருத்துவ சிகிச்சைகளிற்கு அரசு நிதியளிக்கும் என்று அறிவித்துள்ளது.
அந்த வகையில், 16 வகையான மருத்துவச் சிகிச்சைக்கு அரசு நிதியளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இன்-விட்ரோ கருத்தரித்தல், கரு மாற்று அறுவை சிகிச்சை, உறைதல் மற்றும் விந்து சேமித்தல் போன்றனவும் இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
ஆகவே இதனால், சீன மக்கள் இவ்வாறான சிகிச்சைகளை எந்த வகையான செலவும் இன்றி பெற்றக்கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.
சீனாவில் இதுவரை இல்லாத அளவில் குழந்தை பிறப்பு வீதம் ஆண்டுக்கு 1,000 பேருக்கு 6.77 எனக் குறைவடைந்துள்ளது.
ஆயினும் இனி வரும் காலங்களில் குழந்தை பிறப்பு வீதம் இதை விட மேலும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்ற காரணத்தால் சீன அரசு தற்பொழுது இந்த இலவச சிகிச்சை திட்டத்தைக் அறிமுகம் செய்துள்ளது.
அத்துடன், கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம், குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிக்கும் நோக்கில் சட்டங்களை மாற்றுவது குறித்த வழிகாட்டுதலை வழங்கியிருந்ததைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆயினும், குழந்தை வளர்ப்பிற்கு அதிகளவான நிதி தேவை என்பதால் இளம் தலைமுறையினர் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தயக்கம் காட்டுவதால் அவர்களுக்கு உதவும் வகையில் சீன அரசு மேலும் பல திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.