Friday, January 17, 2025
HomeLatest Newsஅச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நினைவேந்தல் நிகழ்வுக்கான பிரமாண்ட ஏற்பாடு: அனைவரையும் பங்கேற்க அழைப்பு!

அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நினைவேந்தல் நிகழ்வுக்கான பிரமாண்ட ஏற்பாடு: அனைவரையும் பங்கேற்க அழைப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுக்கான பிரமாண்டமான ஏற்பாடுகள் சிறப்புற இடம்பெற்று வருகின்ற நிலையில் அச்சமின்றி அனைவரையும் நினைவேந்தலில் கலந்துகொள்ளுமாறு வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில் ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் முடங்கி இருந்த காலப்பகுதியிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட தமிழின படுகொலையின் 13 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெளிச்சியுடன் இடம்பெறவுள்ளது.

அந்தவகையில் நேற்று 16 காலை முதல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு வருகைதந்த வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரான அருட்பணி லியோ அடிகளார் உள்ளிட்ட பொதுமக்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அகவணக்கம் செலுத்தி நினைவேந்தல் ஏற்பாட்டு வேலைகளையும் சிரமதான பணிகளையும் முன்னெடுத்துள்ள நிலையில் இன்றும் ஏற்பாட்டு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்துக்குள் இராணுவ காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. பிரதமர் நினைவேந்தல் செய்ய எந்த தடையும் இல்லை என தெரிவித்தாலும் நினைவேந்தல் வளாகத்துக்குள் இராணுவ காவலரண் அமைக்கப்பட்டமைக்கு உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு நினைவேந்தல் வளாகத்தை சூழ பொலிசார் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நினைவேந்தல் வளாகத்துக்குள் வருபவர்களை பொலிசார் பதிவு செய்து அச்சுறுத்தல் விடுத்தும் வருவதாக உறவுகள் குற்றம் சுமத்துகின்றனர்.

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி அம்பாறையில் இருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்தும் முள்ளிவாய்க்கால் நோக்கி போரணிகள் ஆரம்பமாகி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நோக்கி வந்துகொண்டிருக்கின்ற நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில் மக்கள் பாரிய உணவு நெருக்கடிக்கு முகம் கொடுத்த நிலையில் அந்த மக்களின் உணவுத் தேவைக்காக பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் அவர்களது பசி போக்கிய முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நடவடிக்கையும் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News