இலங்கையிலிருந்து தமிழகம் வந்தவர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழ் மக்கள், தமிழகம் நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளதுடன் . கடந்த இரு தினங்களில் 4 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடியினை சென்றடைந்துள்ளதாக அறியப்படுகிறது .
இவ்வாறாக இந்திய கடலோர காவல் படையால் மீட்கப்பட்ட இலங்கை தமிழர்கள் 6 பேரும் விசாரணைக்குப்பின்பு இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் மரைன் பொலிஸாரினால் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர் .
இதில் யாழ்ப்பாணம் கஜேந்திரன், இவரது மனைவி மேரிகிளாரின், மன்னாரை சேர்ந்த டியோரி ஆகியோரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதாகவும் அதேவேளை,
டியோரியின் பிள்ளைகளான எஸ்தர், மோசஸ் இருவரையும் வேலூர் சிறப்பு முகாமில் உள்ள டியோரியின் பாட்டியிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
இந்தச் சூழலில் தமிழக அரசு, அகதிகளாக வந்தவர்களை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சிறையில் அடைக்கும் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவிற்கு பின் 16 பேரும் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் என குறிப்பிடப்படுகிறது .
இதற்கமைய முகாமில் 150 வீடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் . உணவு வழங்க 30 சமையலர்கள், உதவியாளர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.