உலகின் மிகப் பெரிய டெக் மற்றும் ஐடி நிறுவனங்களில் பணி நீக்கம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது கூகுள் நிறுவனமும் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது.
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்போது கூகுள் நிறுவனமும் பணி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ட்விட்டர், மெட்டா, அமேசான் போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கானோரை பணி நீக்கம் செய்துள்ளன.
இந்நிலையில், கூகுள் குறைந்தது 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. கூகுள் நிறுவனம் தனது புதிய ரேட்டிங் முறையை பயன்படுத்தி ஊழியர்களை பணியிலிருந்து நீக்கும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அமைப்பில், திறன் மதிப்பீடு மோசமாக இருக்கும் ஊழியர்களுக்கு வழி காட்டப்படும். கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் (Alphabet) விரைவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான உத்தரவை வெளியிட உள்ளது.
செயல்திறன் சரியாக இல்லாத சுமார் 6% ஊழியர்களின் பட்டியலை உருவாக்குமாறு மேலாளர்களை ஆல்பாபெட் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. நிறுவனத்தின் ஊழியர்களின் 6% என்பது, சுமார் 10,000 ஊழியர்கள் ஆகும். புதிய மதிப்பீட்டு முறையின்படி, கூகுள் ஊழியர்களின் பணிநீக்கம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் நிலையில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழப்பார்கள்.
மேலும், இந்த மதிப்பீட்டு முறையின்படி, பணியாளர்கள் பெறும் போனஸ் மற்றும் பங்கு வருமானம் எவ்வளவு என்பதை மேலாளர்கள் முடிவு செய்யலாம். அறிக்கையை மேற்கோள் காட்டி, தரவரிசை முறையின்படி, அதிக மதிப்பெண்களைப் பெறக்கூடிய ஊழியர்களின் சதவீதத்தை குறைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டில் மொத்தம் 1,87,000 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த மாதம் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இது தவிர, ட்விட்டரை வாங்கிய பிறகு, எலான் மஸ்க் நிறுவனத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளார். இ-காமர்ஸ் இணையதளமான அமேசான் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, பணி நீக்கம் மேற்கொள்ளப்படும் என குறிப்பால் உணர்த்துகையில், ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் செயல் திறனை 20 சதவிகிதம் அதிகரிப்பதே எங்கள் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார். சில பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படும் நிலையில், அவர்கள் நிறுவனத்தில் வேறு ஒரு புதிய பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு ஆல்பபெட் 60 நாட்கள் அவகாசம் அளிப்பதாக முந்தைய அறிக்கைகளில் தகவல்கள் வெளிவந்தன.