எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும், இதனால் நுகர்வோர் தமக்கு தேவையான அளவு முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஆர். எம் . சரத் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில் பண்டிகைக் காலங்களில் முட்டைகளை நுகர்வோர் கொள்வனவு செய்ய முடியும் எனவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 50 ரூபாவிற்கு மேல் முட்டைகளை கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக வரும் பண்டிகை காலத்துக்காக தயாரிக்கப்படும் கேக் போன்றவற்றுக்கு பேக்கரிகளில் முட்டைக்கு அதிக கிராக்கி இருப்பதாகவும், ஆனால் வரும் வாரத்திற்கு பின்னர் வாடிக்கையாளர்கள் தட்டுப்பாடின்றி முட்டைகளை வாங்கும் வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
தற்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகளிலும் முட்டை உற்பத்தி வெற்றிகரமாக நடந்து வருகிறது சுமார் இரண்டு மூன்று மாதங்களில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில் நுகர்வோருக்கு முட்டைகளை விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முட்டை உற்பத்தியாளர்கள் என கூறிக்கொள்ளும் சிலர் முட்டை தட்டுப்பாடு இருப்பதாக கூறி முட்டையின் விலையை அதிகரிக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.