தமிழ்த்தேசிய பண்பாட்டுபேரவையினரால் முன்னெடுக்கபப்ட்ட கையெழுத்து போராட்டம் நிஷாந்தன் தலைமையில் இன்று காலை நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியில் நடைபெற்றிருந்தது.
இதனைத்தொடர்ந்து நிஷாந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் தெரிவித்ததாவது ;
இன்றைய தினம் யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்பாக மாபெரும் கையெழுத்துப்போராட்டத்தினை ஆரம்பித்திருக்கின்றோம்.
இந்த போராட்டமானது இலங்கையினுடைய முன்னாள் ஜனாதிபதியும் தமிழ் இன படுகொலையாளியுமான கோட்டாராஜபக்ஷவினை கைது செய்யுமாறு கோரி சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு ஒரு மகஜர் ஒன்றிணை அனுப்புவதற்கான களத்தில் இன்று முதலாவது கையெழுத்து போராட்டத்தினை ஆரம்பித்திருக்கின்றோம்.
உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள புலம்பெயர் தமிழர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இதனடிப்படையில் எமது தாயகத்தில் 10 ஆயிரம் கையெழுத்துக்களை இன்னும் ஒரு வாரத்திற்குள் சேர்த்து சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு அனுப்புவதற்காக இந்த முயற்சியினை எடுத்திருக்கின்றோம்.
இந்த இனப்படுகொலையாளி கோட்டாராஜபக்ஷாவினை உலகளாவிய சட்ட நியாயத்தின் கீழ் கைது செய்து சர்வதேச சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் சிங்கப்பூர் அரசாங்கத்தினை கேட்டு நிற்கின்றோம்.
இதற்கு எமது தாயகத்தின் பல்கலைக்கழக சமூகம் ,வர்த்தக சமூகம் ஏனைய அரசியலக் கட்சிகள்,பொது அமைப்புக்கள் ,பொது மக்கள் ஓத்துழைப்புக்களையும் ,உதவிகளையும் கோரி நிற்கின்றோம். என்றார்.