Tuesday, December 24, 2024

தயார்படுத்தல் இன்றி எரிபொருள் விநியோக அறிவிப்பா? கடும் விசனத்தில் மக்கள்

யாழ்ப்பாணம் A9 வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

காலை தொடக்கம் மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். எனினும் மதியம் ஆகியும் எரிபொருள் விநியோகம் இடம்பெறவில்லை.

கொடும் வெயிலில் மக்கள் வரிசைகளுடன் வாகனங்களுடன் காத்திருக்கின்றனர். தயார்படுத்தல் இல்லாமல் எப்படித் தான் மக்களை சாகடிக்க மனசு வருகின்றதோ?? என சமூக வலைத்தளங்கள் மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையடுத்து, கிளிநொச்சி மாவட்டத்திலும் எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மாத்திரமே கிளிநொச்சியில் உள்ள நிலையில் 2 வாரம் எரிபொருள் மக்களிறகு கிடைக்கவில்லை.

நாடு முழுவதும் இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருக்கின்றனர்.

இன்று காலை முதல் இவ்வாறு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலையில், இதுவரை எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கு எரிபொருள் எடுத்து வரப்படவில்லை.

மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு காத்திருக்கும் மக்களிற்கு இன்று மாலை எரிபொருள் வழங்கக் கூடியதாக இருக்கும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வாகனத்தின் பதிவு இலக்கத்தின் கடைசி இலக்கம் மற்றும் அதற்குரிய நாளுக்கமைய நாடு முழுவதும் இன்று முதல் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டது.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

இந்த எரிபொருள் விநியோகத்துக்கு ‘தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம்’ பொருந்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகனப் பதிவு எண்ணின் கடைசி இலக்கமான 3, 4, 5 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகனங்களை மாத்திரம் இன்று எரிபொருள் பெற வருமாறு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Videos