காஸாவில் காயமடைந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, பிரெஞ்சு ஹெலிகாப்டர், கேரியர் டிக்ஸ்முட் ( Dixmude ) எகிப்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை
பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு தெரிவித்துள்ளார்.
மோதல் தொடங்கிய பின்னர், எகிப்தில் வந்திறங்கிய முதல் மேற்கத்திய இராணுவக் கப்பல் இது ஆகும். இது திங்களன்று காசாவின் மேற்கே 50 கிமீ தொலைவில் உள்ள எல் அரிஷில் நிலைகொண்டது. இந்த கப்பலில் 40 படுக்கைகள் உள்ளதோடு இரண்டு அறுவை சிகிச்சை மையங்களும் உள்ளன.
போர்க்கப்பலில் லேசான காயம் உள்ளவர்களுக்கு தரையில் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்லும் முன் சிகிச்சை அளிக்க முடியும். 16 அறுவைசிகிச்சை நிபுணர்கள் மற்றும் 6 குழந்தை மருத்துவர்கள் உட்பட சுமார் 22 சிவில் மருத்துவர்கள் கப்பலில் இருப்பதாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, போர் நிறுத்தத்தின் போது காசாவில் உள்ள பொதுமக்களுக்கு முக்கிய மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக அமெரிக்கா மூன்று இராணுவ விமானங்களை எகிப்துக்கு அனுப்புகிறது என்று மூத்த அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவப் பொருட்கள், உணவு உதவி ஆகியவற்றைக் கொண்டு வரும் முதல் விமானம் செவ்வாய்கிழமை வடக்கு சினாயில் தரையிறங்கும் என்றும், மற்ற இரண்டு விமானங்கள் “வரும் நாட்களில்” சென்றடையும் என்றும் அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.