ரகசியக் காப்புறுதி மீறல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானும்,
அவரது அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த மஹ்மூத் குரேஷியும் குற்றவாளிகள் என்று அந்த நாட்டு தேசிய புலாய்வு அமைப்பான எஃப்ஐஏ அறிவித்துள்ளது.
இது குறித்து ‘பாகிஸ்தான் அப்ஸா்வா்’ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசு ரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இம்ரான் கான் மற்றும் மஹ்மூத் குரேஷிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை எஃப்ஐஏ சனிக்கிழமை தாக்கல் செய்தது.
அதில், தனது பதவிக் காலத்தின்போது அமெரிக்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசியத் தகவல்களை கசிய விட்டு, அதன் மூலம் ரகசியக் காப்புறுதியை மீறியதாக இம்ரான் கான் மற்றும் மஹ்மூத் குரேஷிக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கில் அவா்கள் இருவரும் குற்றவாளிகள் என்று எஃப்ஐஏ தெரிவித்துள்ளது.
அதற்கு ஆதாரமாக, இம்ரானும், குரேஷியும் கடந்த மாா்ச் 27-ஆம் தேதி பேசியதன் எழுத்துவடிவப் பதிவுகளை தனது குற்றப்பத்திரிகையில் எஃப்ஐஏ இணைத்திருந்தது. மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய 28 சாட்சியங்களின் பட்டியலையும் அந்தப் புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்திடம் சமா்ப்பித்துள்ளது.
அந்தப் பட்டியலில், வெளியுறவுத் துறைச் செயலா் ஆசாத் மஜீத், வெளியுறவுத் துறை முன்னாள் செயலா் சொஹைல் மஹ்மூத், வெளியுறவுத் துறை கூடுதல் செயலா் ஃபைசல் நியாஜ் டிா்மிஸி ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். மேலும், இந்த வழக்கு விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்துக்கு எஃப்ஐஏ கோரிக்கை விடுத்துள்ளது என்று ‘பாகிஸ்தான் அப்ஸா்வா்’ வலைதளம் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில், ரகசியக் காப்புறுதி மீறல் வழக்கில் இம்ரானும், குரேஷியும் குற்றவாளிகள் என்று தனது குற்றப்பத்திரிகையில் எஃப்ஐஏ ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளது.