இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எர்னி பஃபெட் என்ற 84 வயது முதியவர், சிறு வயதில் பள்ளியில் படித்த போது இயற்பியல் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
அந்த பாடத்தில் வெற்றி பெற தொடர்ந்து 5 முறை தேர்வு எழுதிய போதும், அவரால் அதில் வெற்றி பெற முடியாததால் தனது முயற்சியை அவர் கைவிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது சிசெஸ்டர் நகரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வரும் முதியவர் எர்னிக்கும், சிறு வயதில் தான் தோல்வி அடைந்த இயற்பியல் பாடத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மீண்டும் பள்ளியில் சேர்ந்து இயற்பியல் தேர்வை எழுத முடிவு செய்துள்ளார். அவரது இந்த விருப்பத்திற்கு, முதியோர் இல்லத்தின் மேலாளரான ரையான் ஹேரிஸ் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்.
இதையடுத்து தற்போது ஒவ்வொரு வாரமும் இயற்பியல் வகுப்புகளுக்குச் சென்று வரும் எர்னி பஃபெட், அடுத்த ஆண்டு நடைபெறும் இயற்பியல் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறுவேன் என உறுதியுடன் தெரிவித்துள்ளார்.