Thursday, May 2, 2024
HomeLatest Newsஉச்சக்கட்ட போர்ப் பதற்றம் – பதிலடிக்குத் தயாராகும் தென்கொரியா!

உச்சக்கட்ட போர்ப் பதற்றம் – பதிலடிக்குத் தயாராகும் தென்கொரியா!

பசிபிக் பிராந்தியம் அமைந்திருக்கும் முக்கிய நாடான வடகொரியா, அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள், மேற்கத்திய நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.

அதுமட்டுமன்றி தொடர்ந்து பலமுறை ஏவுகணை சோதனையும் நடத்தி வருகிறது.

இவ்வாறான நிலையில், கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை நடத்திய வட கொரியாவுக்கு பதிலடி தரப்படும் என்று தென் கொரியா அறிவித்துள்ளமையானது கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவுடனான மோதல் போக்கை கைவிட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தையும் நடத்தினார்.

அதன் பின்னர் ஏவுகணை சோதனைகளை குறைத்த வடகொரியா, மீண்டும் அதை தொடங்கி இருக்கிறது.

இந்த ஆண்டின் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்திக் காட்டியது வடகொரியா.

இந்த நிலையில் தற்போது தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஆயுத சோதனைகளை வட கொரியா முடுக்கிவிட்டுள்ளது.

எனவே கொரிய எல்லையில், அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக 3 நாடுகளையும் அச்சுறுத்தும் விதமாக அடுத்தடுத்து வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

கடந்த 25 ஆம் திகதி திகதியிலிருந்து 3 முறை ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கும் வட கொரியா 4 வது முறையாக இன்றும் சோதனை நடத்தியுள்ளது.

இதன் போது கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி இருப்பதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை ஜப்பான் எல்லையின் மேற்பரப்பில் பறந்ததாக தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் அலுவலகம், மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியது.

இந்த நிலையில் வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை சோதனை மேற்கொண்ட வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று தென்கொரிய அதிபர் எச்சரித்துள்ளார். இதன் காரணமாக அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News