Wednesday, December 25, 2024

ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுடன் மூலோபாய கூட்டிணைவு.!!

இந்தியாவின் துரித வளர்ச்சி காரணமாக அண்மைய காலங்களாக ஐரோப்பிய நாடுகள் பல இந்தியாவுடன் இராணுவ மற்றும் இராஜதந்திர உறவுகளை மேற்கொள்ளும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

பொதுவாக தென்னாசிய நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் நெருக்கமான உறவினை வைத்துக் கொள்வது குறைவு என்ற கருத்து நிலவுகின்றது. காரணம் ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் வளர்ச்சியடைந்த நிலையிலும் தென்னாசியா வளர்ந்து வரும் பட்டியலிலும் காணப்படுவதினால் உறவு நிலைகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றதை கடந்த காலங்களில் அவதானித்திருக்க முடியும்.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய பிரதானி ஒருவர் இந்தியாவிற்கு முதற்தடவை பயணம் செய்திருப்பது பல திருப்பங்களுக்கு முக்கிய காரணியாக அமைந்திருக்கின்றது. இந்த பயணம் குறித்து இன்றைய ஆய்வுப் பகுதியில் நாம் பார்க்கலாம்.

இந்தியாவின் நடுநிலையான போக்கு மற்றும் தடுமாற்றமில்லாத சிந்தனை என்பவற்றால் பல மேற்கு நாடுகள் கவரப்படுகின்றன மட்டுமல்லாது இந்தியாவுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளவும் முயற்சிக்கின்ற சூழல் தற்போது காணப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

இந்தியா தனது எல்லைப் பாதுகாப்பு தொடங்கி அனைத்து துறைகளிலும் மிகவும் துல்லியமான வளர்ச்சியை கண்டு வருவதால் அமெரிக்கா உட்பட பல மேற்கு நாடுகள் இந்தியாவின் உறவினை மேம்படுத்த ஆர்வம் கொண்டுள்ளமை தற்கால அவதானிப்புக்களாக இருக்கின்ற சூழலில் நேற்றைய தினம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் Ursula von der Leyen  இரண்டு நாட்கள் மூலோபாய இராஜதந்திர நோக்கிலான விஜயத்தை இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ளமை பல வெளிநாட்டு முடிச்சுகளை அவிழ்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்படி இரு பிராந்திய சந்திப்பானது உக்ரைன் மற்றும் ரஷ்ய போர் நிலைமைகளில் செல்வாக்கு செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கிடையிலான சந்திப்பானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக அமையும் என இந்திய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் Ursula von der Leyen பெண்மணியின் முதலாவது இந்தியாவிற்கான பயணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஒன்றிய தலைவரின் மேற்படி பயணம் இந்தியாவின் அதிபர் மற்றும் பிரதமர் உட்பட பல முக்கிய இராஜதந்திரிகளை சந்தித்து பேசுவதுடன் உலகில் தற்போதைய கள நிலைமை தொடர்பாகவும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக மேற்குலகில் முக்கிய பிரச்சனையாக காணப்படுகின்ற காலநிலை மாற்றம், பல்லுயிரிகளின் இழப்பு குறிப்பாக அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாப்பது தொடர்பான செயற் திட்டம், இராணுவ நவீன மயப்படுத்தல், தொடர்பாடல், எல்லை மற்றும் வலய பாதுகாப்பு செயற்திட்டங்கள் மற்றும் எண்ணெய் உட்பட அத்தியவசிய தேவைகளின் பரிமாற்றம் போன்ற பல்துறை சார்பில் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளதாகவும் இவற்றில் இந்தியாவின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறும் அதேவேளை மேற்படி செயற்திட்டங்களில் பிரதான பங்காளியாக இந்தியாவையும் ஐரோப்பிய ஒன்றியம் தனது அணியில் இணைத்து கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளமையும் தெரிய வருகின்றது.

அத்துடன் இந்தோ பசுபிக் பிராந்திய பிரச்சனைகள் தொடர்பிலும் சீனாவின் தொந்தரவுகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பது தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி இந்தியாவிற்கு கிடைக்கும் என்ற நிலை காணப்படுகின்றது.

மேலும் பொருளாதர ரீதியில் இந்தியாவின் பல அத்தியவசிய தேவைகள் மற்றும் பொருட்களின் பாவனை முறைகளில் முன்னேற்றம் தேவைப்படுவதாகவும் குறிப்பாக மருத்துவத் துறையில் இந்தியா மேலும் படிகள் முன்னேற வேண்டியுள்ளமையால் அவற்றிற்கான முழுமையான உத்தரவாதத்தையும் உதவிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்குவதாக உறுதியளித்துள்ளமையும் இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.

மட்டுமல்லாது இராணுவ மயப்படுத்தும் செயற் திட்டத்தில்  தற்போதைய உக்ரைன் மற்றும் ரஷ்ய போரில் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைக்கு உதவிகளை வாரி வழங்கிக் கொண்டும் ரஷ்யாவிற்கு எதிராக தடைகளை விதித்து பொருளாதார சிக்கல்களை உருவாக்கியிருக்கின்ற சூழலில் இந்தியா தற்போது வரைக்கும் நடுநிலை பேணி வருகின்றமை எவ்வாறான முடிவினை கொடுக்கப் போகின்றது என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுகோளினை ஏற்குமா என்பதும் அவ்வாறே ஏற்கும் பட்சத்தில் ரஷ்யாவிற்கு எதிராக செயற்பட வேண்டிய சூழல் இந்தியாவிற்கு ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன என்பதும் மாறாக மேற்படி வேண்டுகோளினை நிராகரிக்கும் பட்சத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த நகர்வு எப்படியானதாக இருக்கும் என்பது எதிர்வு கூறமுடியாத எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

தற்போதைய சூழலில் வளர்ந்து வருகின்ற நாடுகளை வெகுவாக பாதித்திருக்கின்ற எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற பொருளாதார சிக்கல்களை தீர்க்கக் கூடிய வழிகள் குறித்தும் மேற்படி சந்திப்பில் கலந்துரையாடப்படும் என கூறப்படுகின்றது.

இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் கடந்த பத்து வருட பொருளாதார ரீதியிலான பொருட்களின் பரிமாற்றங்கள் 41% மும், பரிமாற்ற சேவைகள் 76% மும் அதிகரித்த நிலை காணப்படுகின்றது. மட்டுமல்லாது கடந்த 2020 ஆண்டில் இரண்டு தரப்புக்களிலும் நடைபெற்ற பொருளாதர பரிமாற்றங்களின் மொத்த பெறுமதி 96 பில்லியன் யூரோக்கள் ஆகும்.

அதேவேளை இந்தியாவில் சுமார் 4,500ற்கும் மேற்பட்ட ஐரோப்பிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளமையானது இந்தியாவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு மொத்த முதலீடுகளில் 16% ஆகும். மேலும் மேற்படி நிறுவனங்கள் மூலம் நேரடியாக 1.5 மில்லியன் வேலை வாய்ப்புக்களும் நேரடியல்லாத நிலையில் சுமார் 5 மில்லியன் வேலை வாய்ப்புக்களும் இந்தியர்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளமை மிகுந்த நன்மையான விடயமாக இருக்கின்ற அதேவேளை கடந்த 2015-2020 ஆண்டு காலப் பகுதியில் முதலீடு செய்யப்பட்ட ஐரோப்பிய நிறுவனங்களின் மொத்த முதலீட்டு தொகையானது சுமார் 83 பில்லியன் யூரோக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சூழலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரின் இந்திய வருகை பல மாற்றங்களையும் இந்தியாவின் பொருளாதார மற்றும் இராணுவ வளர்ச்சியில் மேலும் பல மைல்கல்களையும் எட்ட உதவி புரியும் என இந்திய ஆய்வாளர்கள் முற்றிலும் எதிர்பார்க்கின்றார்கள்.

Latest Videos