வெளிநாடுகளிலிருந்து மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக சட்ட ரீதியான நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான விதிமுறைகளுக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்த பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சிறிலங்கா அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழி வகுக்கும் வகையில் செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைச்சரவை அனுமதி கோரப்படவுள்ளது.
வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகளின் படி, மின்சார வாகனங்களின் இறக்குமதியின் சட்டபூர்வ தன்மைகள் குறித்து பல வெளிநாட்டு தொழிலாளர்கள் கவலைகளை எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான விதிமுறைகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இந்த வாரம் வழங்கப்பட்ட பின்னர் உரிய நேரத்தில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என சிறிலங்கா அமைச்சரவை பெச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் வெளிநாட்டு வருமானத்தை சட்ட மற்றும் முறையான வழிகளில் நாட்டிற்கு அனுப்புவதை ஊக்குவிப்பதற்காக இந்த சலுகை வழங்கப்படவுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிப்படுத்தும் கரிசனைகளை நிவர்த்தி செய்யும் வகையில், வர்த்தமானியை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.