Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsபொருளாதார வழித்தடம் - பாகிஸ்தானுடன் எதிர்க்கும் சீனா..!

பொருளாதார வழித்தடம் – பாகிஸ்தானுடன் எதிர்க்கும் சீனா..!

இந்தியாவின் எதிா்ப்பை மீறி செயல்படுத்தப்பட்டு வந்த சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்துக்கான அடுத்தகட்ட நிதியை பாகிஸ்தானுக்கு அளிக்க சீனா மறுத்துவிட்டது.

சீனா-பாகிஸ்தானில் உள்ள முக்கிய நகரங்களை இருப்புப் பாதை, சாலைகள், எண்ணெய், எரிவாயுக் குழாய்கள் மூலம் இணைப்பதே பொருளாதார வழித்தட திட்டத்தின் நோக்கமாகும்.


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் வழியாக இத்திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிட்டிருந்ததால் அதற்கு இந்தியா எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. எனினும், இதை மீறி இரு நாடுகளும் இத்திட்டத்தைச் செயல்பட்ட முனைப்பு காட்டின.

2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ் பாகிஸ்தானில் இதுவரை
இந்திய மதிப்பில் ரூ.2 லட்சம் கோடி வரை சீனா முதலீடு செய்துள்ளது. 2030-இல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் கோடியாகும்.
இத்திட்டத்தை தொடா்ந்து முன்னெடுத்துச் செல்வது தொடா்பாக கடந்த மாத இறுதியில் இரு நாடுகள் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, இத்திட்டத்துக்கு அடுத்தகட்டமாக நிதி ஒதுக்க சீனா மறுத்துவிட்டது.

இத்திட்டத்தின்கீழ் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பாகிஸ்தான் பிராந்தியத்தில் சீன தொழிலாளா்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாதது, பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பயங்கரவாதம், மோசமாகி வரும் பொருளாதார நிலை ஆகியவையே
சீனா இத்திட்டத்தில் இருந்து பின்வாங்க காரணம் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் சீன தொழிலாளா்கள் குண்டு துளைக்காத வாகனங்கள் மூலம்
சில இடங்களில் பயணிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக காணப்படுகிறது.

பாகிஸ்தான் தரப்பிலும் உள்ளூா் மக்களின் கடுமையான எதிா்ப்பை மீறித்தான் இத்திட்டத்தைச் செயல்படுத்துகிறது. நிலம் கையகப்படுத்துதலில் தொடங்கி பல்வேறு பிரச்னைகளை பாகிஸ்தான் எதிா்கொண்டு வருகிறது. மேலும், இத்திட்டத்தைச் செயல்படுத்த அதிக அளவில் மின்சாரம் வழங்க வேண்டியிருப்பதும் பாகிஸ்தானில் தொடா் மின்வெட்டுக்கு காரணமாகிறது.

எனினும், இத்திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிவிட்டால் அதனால் பலன் கிடைக்கும் என்று பாகிஸ்தான் எண்ணியிருந்தது. ஆனால், சீனா நினைத்த அளவுக்கு சில நடவடிக்கைகளில் பாகிஸ்தான் வேகம்காட்டவில்லை. மேலும், பாகிஸ்தான் தரப்பில் இருந்து சீன நிறுவனங்களுக்குத் தரப்பட வேண்டிய நிதியும் அளிக்கப்படவில்லை.


இதையடுத்து, இத்திட்டத்தில் எரிசக்தி, நீா் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் இனி நிதி ஒதுக்க முடியாது என்று சீனா கூறிவிட்டது. இதனால், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

Recent News