மும்பையில் ராட்சத விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இந்திய தலைநகரான டெல்லியை தொடர்ந்து மும்பையிலும் நேற்றையதினம் மாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததுடன் புழுதிப் புயலும் வீசியது.இதனையடுத்து மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதிகள் தூசி படலமாக காட்சியளித்தது.புழுதிப் புயல் கடுமையாக வீசியபோது மும்பையின் காட்கோபர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ராட்சத இரும்பு விளம்பர பலகை ஒன்று திடீரென சரிந்து எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மீது விழுந்தது.
இதில் அங்கு நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மற்றும் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் சிக்கியது. இதையடுத்து உடனடியாக அங்கு மீட்பு பணி இடம்பெற்றது.இந்நிலையில் குறித்த சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 70க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டதுடன், குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாநிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.அதேவேளை புழுதிப் புயல் காரணமாக மும்பை விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.