புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற மே 28 ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளார்.
இந்நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் மோடி திறந்துவைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், குடியரசுத் தலைவர் திறந்துவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 19 எதிா்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
அத்துடன், இது குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முக்கு பெரும் அவமதிப்பு என்பதுடன் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்றும் எதிா்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.
அதனால், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவரே திறந்து வைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிகை வைத்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அது மட்டுமன்றி, இந்த வழக்கினை தொடர்ந்தமைக்கும் அபராதம் விதிக்கப் போவதாக நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.