22ஆம் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் இன்றும் நாளையும் நடத்தப்படவுள்ளது.
அத்துடன் நாளைய தினம் விவாதம் முடிவுக்கு வந்த பின்னர் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, இன்று விவாதிக்கப்படவுள்ள 22ஆம் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.
இதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் பங்கேற்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22ஆம் திருத்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
22ஆம் திருத்த சட்டமூலம் தொர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைக்கும் குறித்த திருத்த சட்டமூலத்துக்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 22ஆம் திருத்த சட்டமூலத்தின் சில சரத்துகள் திருத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாஹர காரியவசம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.