Friday, November 15, 2024
HomeLatest Newsதகர்த்தப்பட்ட உக்ரைன் அணை..!பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு..!

தகர்த்தப்பட்ட உக்ரைன் அணை..!பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு..!

உக்ரைனின் நோவா ககோவ்கா அணைக்கட்டு தகர்த்தப்பட்டதை தொடர்ந்து வெளியேறி வரும் தண்ணீரால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளதாக உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டின், கெர்சன் நகரில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மீது 1956 ஆம் ஆண்டு நோவா ககோவ்கா அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது.

இந்த அணை 30 மீட்டர் உயரமும், 3.2 கிலோ மீட்டர் நீளமும் கொண்டுள்ள நிலையில் இந்த அணையில் உள்ள நீரினை சுமார் 7 லட்சம் பேர் நம்பியுள்ளனர். அத்துடன், இங்கு மிகப்பெரிய நீர்மின் நிலையமும் செயற்படுகின்றது.

இவ்வாறான சூழலில், கடந்த 5 ஆம் திகதி உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய இராணுவத்தினர் வான்வழி தாக்குதல் நடத்திய வேளை ககோவ்கா அணைக்கட்டு உடைந்து தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

அதற்கு ஐ.நா.சபையுடன் பல உலக நாடுகளும் கண்டனம் வெளியிட்டன. ஆயினும், இந்த சம்பவத்திற்கு உக்ரைனும், ரஷ்யாவும் பரஸ்பர குற்றம்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.

இந்த அணை உடைக்கப்பட்டதால் உலகளாவிய உணவுச்சங்கிலியில் பாதிப்பு ஏற்படும் என்றும், லட்சக்கணக்கான மக்களிற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், அணை உடைக்கப்பட்டதால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியமையால் சுமார் 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

அத்துடன், இந்த வெள்ளத்தில் மூழ்கி 15 ற்கும் மேற்பட்டோர் பலியானதாக செய்திகள் வெளியாகின.ஆயினும், அணையில் இருந்து தொடர்ந்தும் தண்ணீர் வெளியேறி வருகின்றது.

இதனால் தற்போது பலி எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளதாக உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Recent News