ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்கி வருகின்றனர்.
இந்த தாக்குதலில் ஏராளமான இஸ்ரேலியர்கள் உயிரிழந்து உள்ளனர். சமீபத்திய மின்னல் வேக தாக்குதலுக்கு ஹமாஸ் பயங்கரவாதிகள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பே ரகசியமாக திட்டமிடப்பட்டது தெரியவந்துள்ளது.
2014-ல் இது குறித்து உளவுத்துறை எச்சரித்தும் இஸ்ரேல் அலட்சியப்படுத்தியது.
அதன் விளைவுகளை தற்போது இஸ்ரேல் கண்டு வருகிறது. ஹமாஸ் என்ற தீவிரவாத இயக்கம் பயங்கரவாதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.
அவர்கள் வெளிநாடுகளில் இருந்து, ஏவுகணைகளை தயாரித்தல், ஏவுதல், மனித வெடிகுண்டு உள்ளிட்ட பல்வேறு வகையான நவீன தொழில்நுட்பத்தை கையாள பயிற்சி பெற்றுள்ளனர். குறிப்பாக, ஹமாஸ் பயங்கரவாதிகள் மோட்டார் பொருத்தப்பட்ட பாரா-கேடர்களை பயன்படுத்தும் என்று இஸ்ரேலியப் படைகள் எதிர்பார்க்கவில்லை. காற்றில் பறந்து வந்து ஏவுகணைகளை வீசுகின்றனர்.
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸ் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டது. அவர்கள் நகரங்களில் இறங்கி, கண்ணில் படும் பொதுமக்களையும், படை வீரர்களையும் பணயக்கைதிகளாக பிடித்தனர். இப்படி ஊடுருவிய நூற்றுக்கணக்கான மோட்டார் பொருத்தப்பட்ட கிளைடர்கள் பயங்கரவாதிகளிடம் இருப்பதாக நம்பப்படுகிறது.
கடலில் இருந்து சிறிய படகுகளில் காசா வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்தனர்.
மறுபுறம், பயங்கரவாதிகளும் பிக்-அப் டிரக்குகளில் கனரக எந்திர துப்பாக்கிகளுடன் இஸ்ரேலுக்குள் விரைந்தனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக கிழக்கு மத்திய தரைக்கடலுக்கு விமானம் தாங்கி கப்பலை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில்:-
அமெரிக்காவின் போர்டு கேரியர் கடற்படை குழு இஸ்ரேல் செல்ல உத்தரவிடப்பட்டு உள்ளது. அந்த போர் விமான கப்பலில் 5 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இதில் பலவகை அரிய விமானங்கள் உள்ளன. இந்த கப்பலில் உள்ள போர் விமானங்கள் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் வாய்ந்தவை. அதே போல் பயங்கரவாதிகளுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்குபவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கும்.
வர்ஜீனியாவை தளமாகக்கொண்ட விமானம் தாங்கி கப்பல் தற்போது மத்திய தரைக்கடலில் இருந்து இஸ்ரேல் நோக்கி விரைந்துள்ளது. இதில் யுஎஸ்எஸ் நார்மண்டி, யுஎஸ்எஸ் தாமஸ் ஹட்னர், யுஎஸ்எஸ் ராம்பேஜ், யுஎஸ்எஸ் கார்னி, யுஎஸ்எஸ் ரூஸ்வெல்ட் மற்றும் எப்-35, ஏபி-15, எப்-16 மற்றும் ஏ-10 போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
அமெரிக்காவின் இந்த அதிநவீன போர்க்கப்பல் எதிரிகள் உள்ள பகுதிகளை நாசமாக்கும் சக்தி கொண்டது. பயங்கரவாதிகள் உள்ள இடங்களை குறி வைத்து துல்லியமாக தாக்கக்கூடிய ஆயுதங்கள் இதில் உள்ளன. மேலும் அதிநவீன கண்காணிப்பு கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் எதிரிகளை அமெரிக்க கப்பல் படை துல்லியமாக கணித்து அதற்கேற்றார் போல் தாக்குதல்களை நடத்தும். மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள இந்த கப்பல் இஸ்ரேல் சென்றதும் பயங்கரவாதிகளுக்கு பேரழிவு ஏற்படும் என கூறப்படுகிறது.