Wednesday, May 8, 2024
HomeLatest Newsதூத்துக்குடியில் இருந்து மேலும் ஒரு தொகுதி அத்தியாவசிய பொருட்கள் இலங்கைக்கு அனுப்பிவைப்பு!

தூத்துக்குடியில் இருந்து மேலும் ஒரு தொகுதி அத்தியாவசிய பொருட்கள் இலங்கைக்கு அனுப்பிவைப்பு!

இலங்கை மக்களுக்கு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் மேலும் ஒரு தொகுதி அத்தியாவசிய பொருட்கள் இன்று புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள உள்ள நிலையில் அந்த மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து மத்திய அரசின் அனுமதியுடன் கடந்த மே மாதம் ஒரு கப்பலில் பொருட்கள் சென்னையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரிசி, பால் பொருட்கள், மருந்துப் பொருட்கள் பெறப்பட்டது.

தூத்துக்குடி துறைமுகத்தில் வி.டி.சி.சன் என்ற கப்பலில் பொருட்கள் ஏற்றப்பட்டு இந்த கப்பல் பயணத்தை தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், தமிழக உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி, தமிழக சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி பெ.கீதாஜீவன், மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா.ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று புதன்கிழமை கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான்,

“பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள உள்ள மக்களுக்கு உதவுவதற்காக இரண்டாவது கட்டமாக இன்று இந்த கப்பலில் 14,700 டன் அரிசி, 250 டன் ஆவின் பால் பொருட்கள், 50 டன் மருந்து பொருட்கள் என மொத்தம் 61 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் மூன்றாம் கட்டமாக பொருட்கள் அனுப்பபடும் என்றார்.

Recent News