Sunday, January 26, 2025
HomeLatest Newsஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உபகுழுவை நியமிக்க தீர்மானம்!

ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உபகுழுவை நியமிக்க தீர்மானம்!

இலங்கையில் வாழும் பல்லின மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக மற்றும் வடக்குக் கிழக்கு மோதல்களின் பின்னர் மீள் குடியமர்த்தல், காணி மற்றும் காணாமல் போனோர் பற்றி மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த அமைச்சரவையின் அங்கத்தவர்களாக பிரதமர் தினேஷ் குணவர்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர்.

இவர்கள் தவிர இதில் மேலும் இரு தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

குறிப்பாக, கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் காணாமல் போன நபரொருவரின் நெருங்கிய உறவினருக்கு வழங்கப்படும் 100,000 ரூபா இழப்பீட்டு தொகையை 200,000 ரூபாவாக அதிகரிப்பதற்கும், நபரொருவர் காணாமல் போயுள்ளமை இழப்பீட்டு அலுவலகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பின் காணாமல் போனமைக்கான சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையை நீக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

மேலும், எவ்வாறிருப்பினும் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வடக்கு , கிழக்கிலும் மற்றும் கொழும்பிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதோடு, ஐ.நா. அலுவலகம் மற்றும் சுவிஸ், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயங்களில் மகஜர் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News