டென்மார்க் கடற்படையின் HDMS ஐவர் ஹூயிட்ஃபெல்ட் ( HDMS IVER HUITFELDT ) வான் பாதுகாப்பு ஃப்ரிகேட் ரக போர் கப்பல் அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்பு குழுவின் ஒரு அங்கமாக கடல்சார் வணிகத்தை பாதுகாக்க செங்கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடந்த மார்ச் 9ஆம தேதி ஏமன் ஹவுதி குழுவினர் ஏவிய நான்கு ட்ரோன்களை கண்டறிந்த மேற்குறிப்பிட்ட கப்பலின் குழுவினர் உடனடியாக அவற்றை சுட்டு வீழ்த்தும் நடவடிக்கைகளை துவங்கினர் ஆனால் அப்போது கப்பலின் பல்வேறு அமைப்புகளில் கோளாறுகள் ஏற்பட்டன.
உதாரணமாக ட்ரோன்களை நோக்கி சுடப்பட்ட குண்டுகள் ட்ரோன்களை நெருங்குவதற்கு முன்னரே வெடித்து சிதறின, மேலும் வான் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகளிலும் கோளாறு ஏற்பட்டு தோல்வி அடைந்ததாக தெரிகிறது, பின்னர் ஒருவழியாக ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டன. தொடர்ந்து கப்பலின் கட்டளை அதிகாரி தனது மேல்நிலை அதிகாரிகளுக்கு அனுப்பிய ரகசிய கோப்பில் இந்த வகை கப்பல்களில் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் நீண்ட காலமாக இருந்தாலும் அவற்றை களைய இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டு இருந்தார் இந்த ஆவணம் கசிந்து ஊடகங்கள் வாயிலாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் ட்ரோயல்ஸ் லுன்ட் பொல்சனிடம் இதுபற்றி கேள்விகள் முன்வைக்கப்பட்ட போது தனக்கு இதுபற்றி அறிவிக்கப்படாத காரணத்தால் இதை பற்றி எதுவும் தெரியாது என கூறினார் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சருக்கு மிக முக்கியமான பிரச்சினை குறித்து அறிவிக்கப்படவில்லை என்பது வெட்ட வெளிச்சமானது மட்டுமின்றி பரபரப்பையும் ஏற்படுத்தியது.
மேலும் பாதுகாப்பு அமைச்சர், இதனை அறிவிக்க வேண்டிய முப்படை தளபதியான விமானப்படை அதிகாரி ஜெனரல் ப்ளெம்மிங் லென்ட்ஃபர் இதை மறைத்த காரணத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக இடைக்கால முப்படை தளபதியாக தரைப்படை அதிகாரி ஜெனரல் மைக்கேல் விக்கர்ஸ் ஹைட்கார்ட் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும்,விரைவில் புதிய தளபதி நியமிக்கப்படுவார் எனவும் அறிவித்தார். இந்த நிலையில் குறித்த போர் கப்பல் செங்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.