Thursday, January 23, 2025
HomeLatest Newsஇலங்கையை ஊடறுக்கும் தாழமுக்கம்- வளிமண்டலவியல் திணைக்களம் அபாய எச்சரிக்கை!

இலங்கையை ஊடறுக்கும் தாழமுக்கம்- வளிமண்டலவியல் திணைக்களம் அபாய எச்சரிக்கை!

இரண்டு நாள்களுக்கு முன்னர் வங்காள விரிகுடாவில் இலங்கையின் நிலப்பரப்பை விட்டு வடக்கு திசையில் விலகிப்போன தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறி மீண்டும் கடலில் இருந்து தெற்கு, தென்மேற்கு திசையில் இலங்கையை ஊடறுத்துப் பயணிக்கக் கூடிய வகையில் தனது நகர்வை ஆரம்பித்துள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இது தொடர்பில் அந்தத் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் உள்ளதாவது:-

“உயரழுத்தம் யாழ்ப்பாணக் கடல் எல்லைவரை நீடிப்பதால், அம்பாறைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையில் பெரும்பாலும் திருகோணமலை வழியே நாளை ஞாயிறன்று கரையைக்கடந்து மத்திய இலங்கை ஊடாக மேற்கிலே அரபிக் கடலில் சென்று பயணிக்கும்.

இதன் காரணமாக இன்று சனிக்கிழமை வடக்கு, கிழக்கில் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் தூறலும் சாதாரண மழையும் காணப்படும்.

நாளை ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் திங்கள் காலை வரை வடக்கு, கிழக்கில் பரவலாக குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

தாழமுக்கம் இலங்கையை ஊடறுத்து பயணிக்கும்போது, மேகக்குவிப்பு மலையகம், கொழும்பை அண்டிய பகுதிகளை நோக்கியே அமைய வாய்ப்புள்ளது. இதனால் மேல் மாகாணம், மத்திய மாகாணம், வட மத்திய மாகாணம், ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் கனமழை முதல் மிக கனமழை வரையான அதீத மழைவீழ்ச்சி சில மணிநேரங்களிலேயே பதிவாகும் வாய்ப்புள்ளது.

மலையகத்தில் சில இடங்களில் மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்படவும் ஏதுவான நிலை காணப்படுகின்றது. ஆபத்தான மலைப் பிரதேசசங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுவது நல்லது” – என்றுள்ளது.

Recent News