தென்கிழக்காசியாவிலுள்ள கம்போடியாவில் தனது பண்ணையில் முட்கைளைச் சேகரிக்கச் சென்ற 72 வயதான முதியவரை பண்ணையிலுள்ள முதலைகள் இணைந்து கடித்துக் குதறிய துயரமான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த முதியவர் தனக்குச்.சொந்தமான இடத்தில் முதலைப் பண்ணையொன்றை அமைத்துப் பராமரித்து வருகின்றார். வழமையாக முதலைகள் இடும் முட்டைகளை சேகரிக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். இந் நிலையில் வழமை போல் முதலையொன்று முட்டையை போட்டுள்ள நிலையில் தாய் முதலையைக் கூட்டிலிருந்து வெளியே இழுத்து முட்டையைச் சேகரிக்க முயன்றுள்ளார்.
தடியொன்றின் மூலம் முதலையை விரட்டிவிட்டு முட்டையை எடுப்பதற்கு முயன்ற சந்தர்ப்பத்தில் முதலை தடியைப் பற்றிப் பிடித்து இழுத்துள்ளது. இந் நிலையில் நிலை தடுமாறிக் கீழே விழுந்த முதியவரைச் சுற்றி வளைத்த அனைத்து முதலைகளும் இணைந்து அவரது உடலைத் துண்டுதுண்டாகக் கடித்துக் குதறியதில் சில நொடிகளில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
முட்டையைச் சேகரிக்க சென்ற முதியவரைக்காணாது தேடிய அங்குள்ளவர்கள் பண்ணையின் நடுவே அவரது உடல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் பொலிசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
உடன் விரைந்த பொலிசார் உடற்பாகங்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் அனைத்து முதலைகளினதும் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி பல உடற்பாகங்கள் முதலைக்கு இரையாகிவிட்டதாகவும் எஞ்சிய உடலெங்கும் முதலைகளின் பல் தடங்கள் பல காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை ஆபத்தான விலங்காக காணப்படும் முதலைகள் முட்டை , தோல் மற்றும் இறைச்சிக்காக பண்ணையில் வளர்க்கப்படுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது முதற் தடவையில்லை என்பதுடன் ஏற்கனவே 2019 ம் ஆண்டு பண்ணைக்கு்.சென்ற இரண்டு வயதுச் சிறுமியை முதலைகள் கடித்துக் கொன்ற சம்பவம் பதிவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.