Friday, May 17, 2024
HomeLatest Newsஇந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைகள்; பிரதமர் விடுத்துள்ள பணிப்புரை!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைகள்; பிரதமர் விடுத்துள்ள பணிப்புரை!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைகளை விவசாயிகளுக்கு விடுவிப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உடனடியாக தீர்க்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான தேசிய வழிநடத்தல் குழுவின் கூட்டம் இன்று பிரதமர் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

17 நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான சவால்கள் குறித்து இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள சுகாதாரத் துறை மற்றும் விவசாயப் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக, வறுமைப் பிரச்சினையை மீளாய்வு செய்தல், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை உன்னிப்பாகக் கவனித்தல், உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உணவு உற்பத்தியை மேம்படுத்துதல், பருவநிலை மாற்றத்தின் சவால்களை முறியடித்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைகளில் அஃப்லடோக்சின் கலந்துள்ளதாக வதந்திகள் பரவி வருவதனால் விதைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.

Recent News