Friday, April 4, 2025
HomeLatest Newsபகிடிவதை தொடர்பான முறைப்பாடுகள் - சிஐடியிடம் சிக்கப்போகும் மாணவர்கள்!

பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகள் – சிஐடியிடம் சிக்கப்போகும் மாணவர்கள்!

பல்கலைக்கழக மாணவர்களுக்கான பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் குற்றவியல் சட்ட நடைமுறைகளுக்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென காவல்துறைமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், பகிடிவதை தொடர்பில் காவல்நிலையங்களுக்கு கிடைக்கும் முறைப்பாடுகள், விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும், அவர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான ஆலோசனைகள் அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் காவல்துறைமா அதிபரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அண்மையில், களனி பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர், மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 3 பேரால் தாக்கப்பட்டு, பகிடிவதை அளிக்கப்பட்டதாக கிரிபத்கொடை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அத்துடன், அதற்கான அறிவுறுத்தல் வழங்கியமைக்காக மேலும் 6 மாணவர்கள், மாணவர் விடுதியினுள் மேலும் சில மாணவர்களால் தடுத்து வைத்து, தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் களனி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பேராதெனிய பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு, சமூக ஊடகத்தை பயன்படுத்தி, ஆபாச படங்களை அனுப்பி, பகிடிவதை அளித்த சம்பவம் தொடர்பில் பேராதனை காவல்நிலையத்துக்கும் முறைப்பாடொன்றும் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு காவல்துறைமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

பிற செய்திகள்

Recent News