சீனக் கப்பலின் வருகையை இடைநிறுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைக்காக இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த விளம்பரப் பிரச்சாரத்தை சீன சமூக ஊடகத் தளம் இடைநிறுத்தியுள்ளதாக உயர்மட்ட வட்டாரம் தெரிவித்துள்ளது.
இலங்கை அதிகாரிகள் இந்த பிரச்சாரத்தை வெள்ளிக்கிழமை ‘Douyin’ இல் தொடங்க ஏற்பாடு செய்தனர். எனினும் அதனை நடைமுறைப்படுத்த முடியாது என இலங்கை தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் எதிர்ப்பைத் தொடர்ந்து ‘யுவான் வாங் 5’ ஆராய்ச்சிக் கப்பலின் துறைமுக அழைப்பை இலங்கை ஒத்திவைத்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இது நடந்ததாக இலங்கை அதிகாரிகள் நம்புகின்றனர்.
மேலும், சீனாவில் உள்ள பல சமூக ஊடகத் தளங்கள் இலங்கை மீது எதிர்மறையான கருத்துகளை வெளியிடுவதாக உயர்மட்ட வட்டாரம் தெரிவித்துள்ளது.
சில சீன பல்பொருள் அங்காடிகள் இலங்கை பொருட்களை கொள்வனவு செய்வதை தாமதப்படுத்தி வருவதாகவும் தெரியவருகிறது.
சீனக் கப்பலான யுவாங் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் தெரிவித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
சீனக் கப்பல் யுவான் வாங் 5 சீனாவினால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக எதிர்வரும் 11 ஆம் திகதி நிறுத்தப்பட்டு ஆகஸ்ட் 17ம் திகதி புறப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இலங்கையின் அறிவிப்பை தொடர்ந்து சீனா கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தது. அத்துடன் இந்தியா மீதும் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
சீனா தனது கடல்சார் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகளை பகுத்தறிவு வெளிச்சத்தில் பார்க்கவும், சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை சீர்குலைப்பதை நிறுத்துமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்துவதாக சீனா அறிவித்திருந்தது.
சில நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு பாதுகாப்பு கவலைகள் என்று கூறுவது முற்றிலும் நியாயமற்றது, என்றும் சீனா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் இருந்து சுமார் 250 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகம், அதிக வட்டிக்கு சீனக் கடன்களால் நிர்மாணிக்கப்பட்டது.
சீனாவிடம் இருந்து வாங்கிய கடனை அடைக்க இலங்கை அரசு போராடியதைத் தொடர்ந்து துறைமுகம் 99 ஆண்டு குத்தகைக்கு சீன வசம் ஒப்படைக்கப்பட்டது.