சீனாவில் வரலாறு காணாத வகையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.
சீனாவின் தென்மேற்குப் பகுதியில் செப்டம்பர் மாதம் வரை அதிக வெப்பம் நிலவும் என கணிக்கப்பட்டுள்ளதால், சீனாவில் நாடு தழுவிய வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,சீனாவில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக, தொடர்ந்து 10-வது நாளாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவப்பு எச்சரிக்கை என்பது அந்நாட்டில் பயன்படுத்தப்படும் 4 அடுக்கு வானிலை எச்சரிக்கை முறையில், அதிகபட்ச எச்சரிக்கை ஆகும்.
இந்த வரலாறு காணாத வெப்பம் காரணமாக, சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் உள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய நதியான யாங்சே நதி வறண்டு போயுள்ளது. பெய்ஜிங்கில் உள்ள சீனாவின் தேசிய வானிலை மையத்தின் தகவலின் படி, கடந்த ஜூன் 13-ம் தேதி முதல் அதிக வெப்பம் நிலவுகிறது.
மேலும்,இதற்கு முன்னதாக, கடந்த 2013-ம் ஆண்டு சீனாவில் தொடர்ந்து 62 நாட்களுக்கு வெப்ப அலைகள் நிலவியது. ஆனால், இப்போது அதனை விடவும் அதிகமாக தொடர்ந்து 64 நாட்களாக வெப்ப அலை நிலவுகிறது.
இந்த வறட்சியால் சீனாவின் நீர் மின்சார உற்பத்தித் திறன் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய ஆறுகளின் நீர்வரத்து 20 முதல் 50% வரை குறைவாக இருப்பதால், சிச்சுவான் மாகாணத்தில் நீர் மின்சார உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 900 மில்லியன் கிலோவாட்-ஆக இருந்த தினசரி நீர் மின்சார உற்பத்தி தற்போது 51% குறைந்து 440 மில்லியன் கிலோ வாட்-ஆக உள்ளது.
மேலும்,சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள 34 மாகாணங்களில் உள்ள 66 ஆறுகள் வறண்டுள்ளன. தென்சீனாவின் மழைப்பொழிவு வழக்கத்தை விட 60% குறைந்துள்ளது. தொடர்ச்சியான அதிக வெப்பநிலை மற்றும் மழையின்மை காரணமாக யாங்சே நதிப் படுகையின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 10 நாட்களில் வறட்சி இன்னும் மோசமடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மொத்த தானிய உற்பத்தியில் 75% இலையுதிர்கால அறுவடையின்போது தான் பெறப்படும் என்பதால், இந்த வறட்சியின் தாக்கம் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.