கேரளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக கோழி முட்டை சாப்பிட்டால் பறவைக் காய்ச்சல் வருமா? என்ற சந்தேகம் இருக்கிறது. அதன் உண்மை என்ன? என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
பறவைக் காய்ச்சல் கேரளாவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நோய் தொற்று காரணமாக 6000-க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்துள்ளன. கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில், பறவைக் காய்ச்சல் பற்றிய செய்தி அம்மாநில மக்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.
பறவைக் காய்ச்சல் பொதுவாக மனிதர்களிடையே வேகமாகப் பரவுவதில்லை, ஆனால் பாதிக்கப்பட்ட பறவைகள் அல்லது பிற பொருட்களுடன் தொடர்பு கொள்ளும் போது மனிதர்களும் பாதிக்கப்படலாம். இந்த நேரத்தில், பெரும்பாலான மக்களின் மனதில் உள்ள மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், முட்டை மற்றும் கோழியை சாப்பிடுவதால் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா என்பதுதான்.
உலக சுகாதார அமைப்பு, H5N1 வைரஸை பறவைக் காய்ச்சல் என்று அழைக்கிறது. இது முக்கியமாக பறவைகளின் நோயாகும். இது பல வகையான இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் ஏற்படுகிறது. ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா என்பது காட்டுப் பறவைகள் மற்றும் கோழிகளைப் பாதிக்கும் தொற்று நோயாகும். எப்போதாவது மனிதர்களை பாதிக்கிறது. இதுவரை, மனிதர்களுக்குப் பதிவாகியுள்ள பறவைக் காய்ச்சலின் அனைத்து நிகழ்வுகளும், கோழிப்பண்ணையில் இருந்து பரவியது தான்.
கோழி மற்றும் முட்டை சாப்பிடுவதால் பறவை காய்ச்சல் பரவுமா?
யுனைடெட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மெண்ட் ஆஃப் அக்ரிகல்சல் (USDA) சரியாக தயாரிக்கப்பட்டு சமைத்த முட்டை மற்றும் கோழி சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது என்று தெரிவிக்கிறது. இதனால் பறவை காய்ச்சல் பரவும் அபாயம் இல்லை. இருப்பினும், இந்த பொருட்களை சரியாக சுத்தம் செய்ய வேண்டும். சரியாக சமைத்த பின்னரே சாப்பிட வேண்டும். கோழிகளை சரியான முறையில் கையாளுதல் மற்றும் சரியான சமையல் ஆகியவை பறவை காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. உண்ணும் போதும், பருகும் போதும் இவற்றைக் கவனத்தில் கொண்டால் ஆபத்து இல்லை.
WHO தரவுகளைப் பார்த்தால், பறவைக் காய்ச்சலினால் மனிதர்களுக்குத் தொற்று இருப்பது முதன் முதலில் 2003-ல் வியட்நாமில் பதிவாகியுள்ளது. இந்த நோய் ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் 15 நாடுகளில் மனித நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளை ஏற்படுத்தியது. இதுவரை, பறவைக் காய்ச்சலால் பல நாடுகளில் 356 பேர் இறந்துள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்ட பறவையுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும்போது பரவும் வாய்ப்பு உள்ளது.