Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsமாஸாக என்ட்ரி கொடுத்த C - 295 - அசத்த போகும் இந்திய விமானப்படை..!

மாஸாக என்ட்ரி கொடுத்த C – 295 – அசத்த போகும் இந்திய விமானப்படை..!

இந்திய விமானப்படை தனது போக்குவரத்து தேவைக்காக அவ்ரோ-748 ரக விமானங்களை 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறது.

அவை பழையதாகி விட்டதால், அவற்றுக்கு மாற்றாக ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து சி-295 ரக நடுத்தர போக்குவரத்து விமானத்தை வாங்க முடிவு செய்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, ரூ.21 ஆயிரத்து 935 கோடி செலவில் 56 சி-295 ரக போக்குவரத்து விமானங்களை தயாரித்து தர ஏர்பஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

ஸ்பெயின் நாட்டில் இந்த விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 2025-ம் ஆண்டுக்குள், 16 விமானங்களை பறக்கும்நிலையில் ஒப்படைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மீதி விமானங்களை இந்தியாவில் டாடா அட்வான்ஸ்டு நிறுவனம் தயாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

ஐதராபாத்தில், இந்த விமானங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. இந்த உதிரிபாகங்கள், கப்பல் மூலம் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ஆலைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு விமானங்கள் உருவாக்கப்படும். இந்தியாவில் தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் முதலாவது ராணுவ விமானமாக இவை இருக்கும்.

இதற்கிடையே, ஸ்பெயின் நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது சி-295 ரக போக்குவரத்து விமானம், கடந்த 13-ந்தேதி இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த விமானம், கடந்த 20-ந் தேதி, வதோதராவில் வந்து சேர்ந்தது.

இந்நிலையில், இந்த விமானத்தை விமானப்படையில் முறைப்படி சேர்க்கும் நிகழ்ச்சி, நேற்று உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை நிலையத்தில் நடந்தது. ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். அவர் முன்னிலையில், விமானம், இந்திய விமானப்படையின் 11-வது படைப்பிரிவில் முறைப்படி சேர்க்கப்பட்டது. விமானப்படை தளபதி, விமானப்படை மற்றும் ஏர்பஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் நடந்த சர்வ தர்ம பூஜையில் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். ஹிண்டன் விமானப்படை நிலையத்தில், ‘பாரத் டிரோன் சக்தி-2023’ என்ற கண்காட்சியை ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தார். இந்திய விமானப்படையும், இந்திய டிரோன் கூட்டமைப்பும் இணைந்து இதை நடத்துகின்றன.

Recent News