கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பிரதமர் இல்லத்தில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனியாக இருப்பதுபோல நடித்துள்ள விடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
லண்டனில் எண் 10, டவுனிங் தெருவில் உள்ள பிரிட்டன் பிரதமருக்கான இல்லத்தில் இந்த விடியோ படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது. 1990-ல் வெளியான ‘ஹோம் அலோன்’ படத்தின் காட்சிகள் போலவே பிரதமர் நடிக்கும் விடியோ பலரது வரவேற்பையும் பெற்று வருகிறது.
”நான் மட்டும் தான் இங்கு இருக்கிறேனா” என அவர் கேட்டுவிட்டு வீட்டில் தனியாக இருக்கும்போது சிறுவர்கள் செய்வதுபோல விளையாடத் தொடங்கிவிடுகிறார்.அந்த விடியோ இறுதியில், வரவேற்பறைக்கு வருகிற அழைப்பை ரிஷி எடுத்து “ஹாரி உங்களுக்குத் தவறான எண் கிடைத்துள்ளது” எனப் பேசுவதோடு முடிகிறது.
லண்டனின் சன் செய்தி நிறுவனத்தின் அரசியல் பிரிவு ஆசிரியராகவுள்ள ஹாரி கோல், சுனக்கின் அலைபேசி எண்ணை வெளியிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதனைக் குறிப்பிடும் வகையில் இதில் ஹாரி பெயரைப் பிரதமர் சொல்வதாக சமூக வலைதளங்களில் கருத்து நிலவுகிறது.
கிறிஸ்துமஸ் நாளன்று இரவு இந்த விடியோ ரிஷி சுனக்கின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியாகியுள்ளது.