பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். இங்கிலாந்தின் புதிய பிரதமர் செப்டம்பர் 5ஆம் தேதியன்று அறிவிக்கப்படும், அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு வாய்ப்பு இருப்பதால், இந்தியர்களும் யார் அடுத்த பிரிட்டன் பிரதமர் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
யார் நாட்டின் புதிய பிரதமர் என்பது ஒருபுறம் என்றால், பிரதமரை அறிவிக்கும் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத், ஒரு மரபை மீறுவார் என்று யூகிக்கப்படுகிறது. அந்த மரபு மீறலுக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. அது உண்மையானால், நாட்டின் பிரதமர் என்ற பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் வெளியேறும்போது, ராணி, பிரிட்டனின் அரண்மனையில் இருக்கமாட்டார்.
அதாவது, வழக்கமாக பிரதமர் தொடர்பான அறிவிப்பு பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்தே வெளியாகும். அதற்கு மாறாக இந்த முறை பால்மோரலில் இருந்து இங்கிலாந்தின் புதிய பிரதமரின் பெயரை ராணி தேர்வு செய்வார் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு தற்போது 96 வயதாகிறது. பால்மோரலில் விடுமுறையில் இருக்கும் ராணி, மரபுப்படி புதிய பிரதமரை பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து அறிவிக்க வேண்டும் என்றால் அதற்கு அவர் 1,000 மைல் பயணிக்க வேண்டும்.
ஏற்கனவே பல்வேறு உடல்நல குறைவுகளால் அவதிப்பட்டு வரும் பிரிட்டன் அரசிக்கு அது மிகப்பெரிய அலைச்சலாக அமைந்து அவரது ஆரோக்கியத்தை மேலும் மோசமாக்கலாம். எனவே பால்மோரலில் இருந்தே ராணி புதிய பிரதமரை அறிவிக்கலாம்.
கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் அல்லது லிஸ் ட்ரஸ் ஆகிய இருவரில் இருந்து ஒருவர் நாட்டின் புதிய பிரதமர் ஆவார்கள். தற்போது, ராணி பாலோரலில் இருக்கும் இடத்தில் இருந்தே, அறிவிப்பை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
புதிய பிரதமர் ராணியை ஸ்காட்லாந்தில் சந்திக்கலாம். ரிஷி சுனக் பிரதமர் ஆனால், அது ஒரு இந்தியர் பிரிட்டன் பிரதமராகும் முதல் வரலாற்று நிகழ்வைப்போல, மற்றுமொரு சரித்திர பதிவை ஏற்படுத்தும்.
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் பால்மோரல் கோட்டைக்குப் புறப்பட்டு செல்லும் இரண்டாம் எலிசபெத் மகாராணி அக்டோபர் வரை அங்கு தங்கிவிட்டு, அதன்பிறகு பக்கிங்ஹாம் அரண்மனைக்குத் திரும்புவார். புதிய பிரதமர் ஸ்காட்லாந்து வரை பயணம் செய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மருத்துவ ஆலோசனையின்படி, ராணி பயணம் செய்யக்கூடாது.
ராணியின் வயது மூப்பின் காரணமாக, இளவரசர் சார்லஸ் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்; சமீபத்தில், பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் இளவரசர் சார்லஸ் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.