Thursday, December 26, 2024
HomeLatest Newsவடக்கு, கிழக்கில் வெடிகுண்டு தாக்குதல்? மிரட்டல் கடிதம் தொடர்பில் அனுர கேள்வி

வடக்கு, கிழக்கில் வெடிகுண்டு தாக்குதல்? மிரட்டல் கடிதம் தொடர்பில் அனுர கேள்வி

ஜூலை 5 அல்லது 6 ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு அல்லது தென்னிலங்கையில் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறலாம் என எச்சரித்து, பாதுகாப்புச் செயலாளருக்கு பொலிஸ்மா அதிபர் அனுப்பிய கடிதம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், குறித்த கடிதத்தின் பிரகாரம் சர்வதேச உளவு நிறுவனங்களின் பங்களிப்புடன் மேற்படி இரண்டு தினங்களில் இடம்பெறவுள்ள கரும்புலிகள் நினைவேந்தல் நிகழ்வுகளை இலக்கு வைத்து இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் எந்தவொரு நிகழ்வுகளிலும் பங்குபற்ற வேண்டாம் என வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை இந்த ஆவணம் எச்சரிப்பதாகவும் பாதுகாப்பு செயலாளருக்கு அனுப்பப்பட்ட ஆவணத்தின் சில பகுதிகளை சுட்டிக்காட்டி அனுரகுமார எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

இந்தத் தகவல்கள் எப்படி, எங்கிருந்து பெறப்பட்டன என்பதையும், அப்படித் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதா என்பதையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தற்போது நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களையும் உணர்வுகளையும் நசுக்கவே இவ்வாறான செய்திகள் பகிரப்படுவதாகவும் சந்தேகம் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

Recent News