Wednesday, December 25, 2024
HomeLatest Newsவெடிவைத்து தகர்க்கப்படும் இந்தியாவின் பிரமாண்ட இரட்டைக் கோபுரங்கள்!

வெடிவைத்து தகர்க்கப்படும் இந்தியாவின் பிரமாண்ட இரட்டைக் கோபுரங்கள்!

இந்தியாவின், உத்தர பிரதேச மாநிலம், நொய்டா நகரில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட பிரமாண்ட இரட்டை கோபுரங்கள் இன்று வெடிவைத்து தகர்க்கப்பட உள்ளன.

இன்று பிற்பகல் 2.30 அளவில் இந்த கோபுரங்கள் தகர்க்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நொய்டாவில் ‘சூப்பர் டெக்’ என்ற நிறுவனத்தின் சார்பில் பிரமாண்ட இரட்டை கோபுர குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் ‘அபெக்ஸ்’ என்ற கோபுரம், 32 மாடிகளை உடையது. இதன் உயரம் 328 அடியாகும்.

மற்றொரு கோபுரத்தின் பெயர் சியான். இது, 29 மாடிகளை கொண்டுள்ளது. இதன் உயரம் 318 அடியாகும். இந்த இரட்டை கோபுரங்கள் விதிமுறையை மீறி கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

கட்டடங்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டு உள்ளதாகவும், புவியியல் சார்ந்து கட்டப்படவில்லை என்றும் முறைப்பாடுகள் எழுந்தன.

இதையடுத்து, இது தொடர்பான ஆய்வுகளையடுத்து இரட்டை கோபுரங்களை நிர்மூலமாக்குமாறு இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நொய்டாவில் உள்ள இரட்டைக் கோபுரங்களைச் சுற்றி சுமார் 500 காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நொய்டா நகரத்துக்கு மேலாக ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு மைல் சுற்றளவில் உள்ள வான் பகுதி விமான பயணங்களுக்கான தடை வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதனை இடிப்பதற்கு விதிக்கப்பட்ட கால அவகாசம், பல காரணங்களால் சுமார் 9 வருடங்கள் வரை நீடிக்கப்பட்ட நிலையில் இறுதியாக, இன்று தகர்ப்பு பணிகள் உறுதிசெய்யப்பட்டன.

இரட்டை கோபுரங்களின் தகர்ப்பு பணிகள் ‘அடிபை என்ஜினியரிங்’ என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த கோபுரங்களை இடிக்க, 3,700 கிலோ வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ‘நீர்வீழ்ச்சி வெடிப்பு’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டடங்கள் தகர்க்கப்படவுள்ளன.

இதன் படி, வெடிமருந்துகள் கட்டடத்தின் உள்பகுதிக்குள் வைக்கப்படும். கட்டடம் இடிந்து விழுந்ததும், உள்புறமாகவே விழும். வெளிப்புறத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

இந்த இடிப்பால், 55 ஆயிரம் டன் கட்டட இடிபாடு குப்பை குவியும். இவற்றை அகற்ற, மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும். தகர்ப்பு பணிகளில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 2.30 க்கு கட்டடங்கள் இடிக்கப்படும். 9 செக்கன்களில் ஒட்டுமொத்த கட்டடமும் இடிந்து விழுந்து விடுமென நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மொத்த தகர்பு பணிகளுக்கும், 20 கோடி இந்திய ரூபா செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent News