ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மூன்று ஆளுநர்கள் நேற்றைய தினம் பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக நியமனம் பெறவுள்ள மூன்று ஆளுநர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம் சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஸ்மன் யாப்பா அபேவர்தனவும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
பி.எஸ்.எம் சார்ள்ஸ் அரச நிர்வாக சேவையில் தேர்ச்சி பெற்ற அதிகாரி அரச அதிபர், வடக்கு மாகாண ஆளுநர், சுங்க திணைக்கள பணிப்பாளர், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் என முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில், ஊவா மாகாண சபையில் அமைச்சராகவும், பதில் முதல்வராகவும் செயற்பட்ட அனுபவம் கொண்டவர்.
லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன முன்னாள் பிரதி நிதி அமைச்சர். மாகாண சபையிலும் பதவிகளை வகித்துள்ளார். தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தம்பியே லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன.
புதிய ஆளுநர்கள் நியமனம் நாளை இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் செந்தில் தொண்டமானுக்கு உறுதியாகியுள்ள போதிலும், ஏனைய இருவர் தொடர்பில் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.