பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை 44 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3½ லட்சம் கோடி) கொடுத்து வாங்கிய உலகப்பணக்காரர் எலான் மஸ்க் டுவிட்டரில் பணியாற்றி வந்த 7,500 ஊழியர்களில் சுமார் 4 ஆயிரம் பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கினார்.
டுவிட்டரை தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியது.
சுமார் 11 ஆயிரம் ஊழியர்களை மெட்டா பணியில் இருந்து நீக்கியது. இது அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 13 சதவீதம் ஆகும்.
இந்த நிலையில் டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கை தொடர்ந்து, உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருவதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 3 சதவீதம் ஆகும்.
மேலும் இதுவரை இல்லாத அளவில் பணிநீக்கம் செய்யப்பட உள்ளது. செலவினங்களை குறைக்க இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமேசான் தரப்பில் கூறப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுவிட்டது என அமேசான் தெரிவித்துள்ளது.
அமேசான் நிறுவனத்தில் சில பணியிடங்கள் தேவையில்லை என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த குறிப்பிட்ட பொறுப்புகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் நிறுவத்துக்குள்ளே வேறு துறைகளுக்கு(காலி இடங்கள் இருப்பின்) விண்ணப்பித்து இடம் மாறிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.