ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா இடையிலான நல்லுறவுகளை உறுதிப்படுத்துவதற்கு பிரான்ஸ் முக்கிய பங்காற்ற வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உடனான தொலைபேசி கலந்துரையாடலின் போதே சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரான்ஸுடனான உயர்மட்ட பரிமாற்றங்களை பேணுவதற்கு சீனா தயாராக உள்ளது எனவும் சீன சந்தையில் பிரான்ஸ் தயாரிப்புகள் நுழைவதனை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சீன சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்கள் நியாயமான போட்டி நிலைமைகளுடன் வரவேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரஷ்யா – வடகொரியா இராணுவ ஒத்துழைப்பு குறித்தும் இம்மானுவல் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ரஷ்ய – வடகொரிய இராணுவ ஒத்துழைப்பு உக்ரைன் மற்றும் ரஷ்ய போரில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மத்திய கிழக்குப் போர் பிராந்திய ரீதியாக அதிகரிக்கக் கூடாது என இரு ஜனாதிபதிகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இருவருக்கும் இடையில் UN காலநிலை மாற்ற மாநாடு COP28 குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரான்ஸ் மற்றும் சீனா இடையே சுற்றுலா மற்றும் கல்வி பரிமாற்றங்களை விரைவுபடுத்துவதற்கும் இருவருக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.