75 ஆவது சுதந்திர தினத்தினை கறுப்பு தினமாக அனுஷ்டித்தமை தொடர்பான வழக்கு ஜூன் மாதம் 23 ஆம் திகதிக்கும் , ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட போராட்டம் தொடர்பான வழக்கு செப்ரெம்பர் மாதம் 04 ஆம் திகதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
குறித்த இரு வழக்குகளும் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் விசேடமாக சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட போராட்டம் தொடர்பாகவும் , யாழில் கொண்டாடப்பட்ட 75 ஆவது சுதந்திர தினத்தினை கறுப்பு தினமாக அனுஷ்டித்தமை தொடர்பான இரு வழக்குகளும் இன்றைய தினம்(08) நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
கறுப்பு தினமாக அனுஷ்டித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், யாழ் மாநகர முன்னாள் மேயர் மணிவண்ணன் மற்றும் வேலன்சுவாமிகள் ஆகியவர்களிற்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த தவணையில் பிணை வழங்கப்பட்டு 3 மாதங்களின் பின்னர் வழக்கு அழைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நான் 1 ,2,,4,7 லாவது சந்தேக நபராக ஆஜராகி சில விடயங்களை எனது வாதத்தில் முன்வைத்தேன்.
அதில், கைது செய்யப்பட்டமைக்கு முதலறிக்கையில் கூறப்பட்டுள்ள காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்கள் என்றும் இதனால் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் முன்வைத்திருந்தேன்.
அத்துடன் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாயின் பொலிஸாரிற்கு எதிராக நாமே வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். மாறாக அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக பொலிஸார் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளனர்.
இவ்வாறான ஒரு வழக்கினை தாக்கல் செய்து மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களை நீதிமன்றுக்கு அழைத்தமைக்கு நாமே பொலிஸாரிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும் .
பொலிஸார் எந்த விதமான முறைப்பாடுகளோ அல்லது சாட்சியத்தின் சுருக்கங்களோ இன்றி இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளனர்.
அத்துடன் கடந்த 3 மாதங்களாக எந்த விதமான புலன் விசாரணைகளும் இடம்பெறவில்லை. ஒரு வழக்கினை தாக்கல் செய்யும் பொழுது அந்த வழக்கின் விசாரணைகளை தொடரவே வழக்கு தாக்கல் செய்து திகதி வழங்கப்படுகின்றது. அந்த விசாரணைக்கு மறுதவணை கொடுக்கும் பொழுது அந்த குறித்த காலத்திற்குள் செய்த விசாரணைகளுடைய மேலதிகயறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
ஆனால் பொலிஸார் எந்த வித மேலதிக அறிக்கையினையும் தாக்கல் செய்யவில்லை.
அதனால் காலம் நேரத்தினையும் சந்தேகநபர்கள் சமூக சேவைகளையும் கருத்திற் கொண்டு இந்த வழக்கினை கிடப்பில் போடுமாறு விண்ணப்பத்தில் மேல்வைத்தோம். குறித்த விண்ணப்பத்தினை மேல்வைத்த அடிப்படையிலே இந்த வழக்கிற்கான தீர்ப்பினை வழங்குவதற்காக ஜூன் மாதம் 23 ஆம் திகதிக்கு குறித்த வழக்கினை ஒத்தி வைத்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதியின் விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட போராட்டம் தொடர்பான வழக்கில் சந்தேக நபர்களிற்கெதிராக ஆஜராகியிருந்தோம். அத்துடன் அந்த வழக்கில் சந்தேக நபர்களை அதிகரித்து செய்வதால் அதனை விரைவாக முடித்து , சட்டமா திணைக்களத்திற்கு அனுப்பி வழக்கு ஒன்று இருக்கின்றதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்குமாறும் நீதிமன்றில் வேண்டுகொண்டோம்.
அத்துடன் காலதாமதமாக அழைக்குமாறும் வேண்டிக்கொண்டதை அடுத்து, இந்த வழக்கினை செப்ரெம்பர் 04 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.