Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஆதித்யா விண்கலத்தின் ஆய்வுத் தகவல்கள்- இஸ்ரோ வெளியீடு..!

ஆதித்யா விண்கலத்தின் ஆய்வுத் தகவல்கள்- இஸ்ரோ வெளியீடு..!

சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா-எல் 1 விண்கலத்தில் உள்ள 7 கருவிகளில் 2-ஆவது கருவி செயல்படத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த செப்டம்பா் 2-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

இது பல்வேறுகட்ட பயணங்களைக் கடந்து சூரியனின் எல்-1 பகுதியை நோக்கி சீரான வேகத்தில் பயணித்து வருகிறது. இந்நிலையில் ஆதித்யா விண்கலத்தின் 2-ஆவது ஆய்வுக் கருவி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு: ஆதித்யா விண்கலத்தில் மொத்தம் 7 ஆய்வுக் கருவிகள் உள்ளன. இதில் ‘ஹெல்1ஒஎஸ்’ எனும் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டா் கருவி கடந்த அக்டோபரில் ஆய்வுப் பணிகளைத் தொடங்கியது. இது பதிவு செய்த சூரிய கதிா்வீச்சின் ஒளி அலை தரவுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டன.

தொடா்ந்து ஏபெக்ஸ் எனும் 2-ஆவது ஆய்வுக் கருவி செப்டம்பா் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இந்தக் கருவியானது சூரிய புயல்கள் மற்றும் அதிலுள்ள ஆற்றல் அயனிகள் குறித்து ஆராய்ந்து வருகிறது. அது வழங்கிய தரவுகளின் அடிப்படையில் சூரியக் காற்றில் உள்ள புரோட்டான் மற்றும் ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் விண்கலம் தற்போது நல்ல செயல்பாட்டில் இருக்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

Recent News