Wednesday, December 25, 2024
HomeLatest NewsWorld Newsஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் துபாயில் பெருவெள்ளம்.. !!!

ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் துபாயில் பெருவெள்ளம்.. !!!

பொதுவாக ஐக்கிய அரபு நாடுகள் என்றால் வறண்ட வானிலை, அதீத வெப்பம் என்ற காலநிலை தான் இருக்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. துபாயில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை நேற்று ஒரே நாளில் கொட்டி தீர்த்தது. இதனால் நகரம் முழுவதும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதே நேரத்தில் சாலைகள் ஆறுகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

செவ்வாய்க்கிழமை மட்டும் 12 மணி நேரத்தில் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 100 மிமீ மழையும், 24 மணி நேரத்தில் மொத்தம் 160 மிமீ மழையும் பெய்துள்ளது. சராசரியாக, துபாய் நகரம் ஒரு வருடத்தில் 88.9 மிமீ மழையைப் பதிவு செய்கிறது. மேலும் அந்நாட்டின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.எதிர்பாராத இந்த கனமழை காரணமாக, பரபரப்பான நகரத்தை ஸ்தம்பிக்க வைத்தது மட்டுமல்லாமல், இப்பகுதியில் தீவிர வானிலை நிகழ்வுகளில் காலநிலை மாற்றத்தின் அதிகரித்துவரும் வெளிப்படையான தாக்கம் பற்றிய கவலையையும் எழுப்பியது.

நேற்று பெய்த கனமழை காரணமாக, சர்வதேச பயணிகளுக்கான உலகின் பரபரப்பான விமான மையமான துபாய் சர்வதேச விமான நிலையம், பல விமானங்களைத் திருப்பிவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏனெனில் கனமழை காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.பொதுவாக மாலை நேரத்தில் 100க்கும் மேற்பட்ட விமான வருகைகளை வரவேற்கும் இந்த விமான நிலையம், நேற்று விமான சேவைகளை நிறுத்தியது. அதைத் தொடர்ந்து 25 நிமிடங்களுக்குப் பிறகு படிப்படியாக மீண்டும் தொடங்கப்பட்டது. மாலையில் புறப்படும் விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்ட போதிலும் பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டதுடன், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

துபாய் வெள்ளம் தொடர்பான பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. வெள்ளத்தில் மூழ்கிய ஓடுபாதைகளில் விமானங்கள் நிற்பதையும், விமான நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் பாதி நீரில் மூழ்கிய கார்களையும் அதில் பார்க்க முடிகிறது.. விமான நிலையத்திற்கு செல்லும் அணுகு சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கின.

துபாய் மால் மற்றும் மால் ஆஃப் தி எமிரேட்ஸ் போன்ற முக்கிய ஷாப்பிங் மால்கள் உட்பட நகரின் முக்கிய உள்கட்டமைப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. ஒரு துபாய் மெட்ரோ ரயில் நிலையத்தில் கணுக்கால் ஆழமான நீர் மூழ்கியது.துபாய் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐக்கிய அரபு நாடுகளிலும் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. அண்டை நாடான பஹ்ரைன் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஐக்கிய அரசு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன, இன்று அங்கு ஆலங்கட்டி மழை உட்பட கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Recent News