பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் ஒருவருக்கு அபூர்வ சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நோயாளியின் முதுகெலும்பில் இருந்த ஒரு கிலோ கிராம் கட்டி நேற்றைய தினம் அகற்றப்பட்டுள்ளது.
6 மணித்தியால சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக கட்டி அகற்றப்பட்டதாக பதுளை மாகாண பொது வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையின் நரம்பியல் சத்திர சிகிச்சை வைத்தியர் லக்மால் ஹெவகே, சத்திரசிகிச்சை பிரிவின் விசேட நிபுணர்கள், புற்றுநோய் சத்திரசிகிச்சை நிபுணர்கள் மற்றும் பிறப்புறுப்பு சத்திரசிகிச்சை நிபுணர்களின் பங்களிப்புடன் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவின் விசேட வைத்திய நிபுணர் லக்மால் ஹேவகே, வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 41 வயதுடைய நபரின் முதுகெலும்பில் தோன்றிய கட்டியை அகற்றுவதற்காக இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
நோயாளியின் முதுகுத் தண்டு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவற்றில் கட்டி பரவியதாகவும், அதன் எடை ஒரு கிலோகிராம் என்றும் சிறப்பு மருத்துவர் லக்மால் ஹெவகே தெரிவித்துள்ளார்.
பதுளை வைத்தியசாலையில் நடத்தப்பட்ட அபூர்வ சத்திரசிகிச்சையில் இதுவும் ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.