கனடாவில் சிறுபிள்ளைகளைத் தாக்கும் (RSV) என்னும் வைரஸ் பரவி வருவதால், கனடாவில் குழந்தைகள் நல மருத்துவமனைகள் திணறி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கப்படுகிறது.
இந்த RSV வைரஸ் ஒரு சாதாரண சுவாசக்கோளாறை உண்டாக்கும் வைரஸ் தான் என்றாலும்,அது கைக்குழந்தைகளை கடுமையாக பாதிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த RSV வைரஸ், நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் தொற்றை உருவாக்கும். இரண்டு வயதுக்குக் கீழுள்ள குழந்தைகள், மற்றும் ஏற்கனவே வேறு உடல் நலப் பிரச்சினைகள் உள்ள பெரியவர்களுக்கு இந்த வைரஸ் மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம்.
முன்னர் இந்த வைரஸ் தொற்றுக்கு குழந்தைகள் மற்றும் அவர்களுடைய தாய்மார்கள் ஆளாகாததால், அவர்களுக்கு இந்த வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. ஆகவேதான் இந்த வைரஸ் எளிதாக வேகமாக பரவிவருகிறது.
இந்த RSV வைரஸ், தும்மல் மற்றும் இருமல் மூலமாக பரவும் என்பதால், தும்மும்போதும் இருமும்போதும் மூக்கை கைக்குட்டை கொண்டு மூடிக்கொள்வது மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.
அத்துடன், தொடுவதன் மூலமாகவும் இந்த வைரஸ் பரவும். அதாவது, பாதிக்கப்பட்ட ஒருவர் தொட்ட இடத்தை மற்றவர்கள் தொட்டு, கண் அல்லது மூக்கைத் தேய்த்தாலும் இந்த வைரஸ் அவர்களைத் தொற்றிக்கொள்ளலாம்.
ஆகவே, கைகளை அவ்வப்போது கழுவிக்கொள்வது பயனளிக்கலாம் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.