Thursday, January 23, 2025

வெளிநாடுகளுக்கு தொழிலுக்குச் செல்லும் பெண்களுக்கு புதிய சிக்கல்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட தொழில் முகவர் நிறுவனங்கள் வழியாக வீட்டுப்பணிப்பெண் மற்றும் பயிற்சியளிக்கப்படாத தொழில்களுக்காக அனுப்பப்படும் பெண்களுக்கு பதிவு செய்துகொள்வதற்காக இதுவரை வழங்கப்பட்டிருந்த அனுமதியானது உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் உள்ள இலங்கை தூதரகத்தினால், அந்நாட்டில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்கள் தொடர்பாக பணியகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மூலம் அவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசா மூலமே அந்த நாடுகளுக்கு வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

அத்துடன் அந்த பெண்களுக்கோ அல்லது அவர்களது தொழில்களுக்கோ பொறுப்பேற்க எந்தவொரு நிறுவனமோ அல்லது நபரோ முன்வராததால், குறித்த பெண்கள் அந்நாட்டில் கைவிடப்பட்டவர்கள் போல் காலம் கடத்தி வருகின்றனர்.

இதனால் அவர்களை மீண்டும் இந்த நாட்டுக்கு அழைத்துவருவதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன.

இதன் பிரகாரம், தொழில்களுக்காக செல்லும் பெண்கள் தொழில் விசா அனுமதிப்பத்திரத்தின் கீழ் வெளிநாட்டுக்குச் செல்வது கட்டாயம் எனவும் சுற்றுலா விசா ஊடாக தொழில் வாய்ப்புக்களுக்கு செல்ல மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பணியக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதேவேளை டுபாய், அபுதாபி உட்பட ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அனைத்து பிரதேசங்களிலும் வீட்டுவேலை மற்றும் பயிற்சியற்ற தொழிலுக்காக பெண்களை நியமித்தல், சுற்றுலா விசா ஊடாக பணி நிமித்தம் வெளிநாட்டுக்கு செல்லும் முயற்சித்தல் போன்ற நடவடிக்கைகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

பிற செய்திகள்

Latest Videos